வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பல் உறுப்பினர்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 43 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த உறுப்பினர்கள் தற்போது தங்கியிருக்கும் நாடுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 17 பேர் டுபாயிலும், 14 பேர் இந்தியாவிலும், மூவர் ஜப்பானிலும் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள்
அத்துடன் எஞ்சிய குற்றவாளிகள் மேலும் ஒன்பது நாடுகளில் மறைந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் இவர்கள் அனைவரையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களுக்கு எதிராக 233 சர்வதேச சிவப்பு அறிவித்தல்களும் (Red Notices), 92 நீல அறிவித்தல்களும் (Blue Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் பதுங்கியிருந்த 72 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |