திலீபன் சிலை விவகாரத்தில் போலி அரசியல்: யாழ். மாநகரசபை கூட்டத்தில் குழப்பம்
தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தை அரசியலாக்காமல் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வில் திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் சற்று பரபரப்பு நிலை ஏற்பட்டது.
கூட்டத்தில் தமிழரசுக் கட்சியை சாடும் வகையில் மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
திலீபனின் நினைவேந்தல்
இதன்போது, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “திலீபனின் நினைவேந்தலுக்கு தமது கட்சி ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தியாகத்தின் மீதான மரியாதையின் அடிப்படையில் தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
திலீபனின் சிலையை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கும் தமது தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை மாறாக சிலை வைக்கத் திட்டமிட்ட கட்சிகள் மாநகர சபையின் நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்பட வேண்டும்.
உணர்வுபூர்வமான இவ்வாறான விடயங்களில் உரிய கால அவகாசத்துடன் பிரேரணையை முன்வைத்து சட்ட ஆலோசனைகளைப் பெற்று அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி ஒருமித்த முடிவை எடுக்க முடியும்.
காவல்துறையினரின் நடவடிக்கை
இந்த விடயத்தில் திலீபனின் நினைவு மற்றும் சிலை தொடர்பான விடயத்தில் காவல்துறையினரின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதைத் தவிர்த்து சட்டவிரோதம் அல்லது அநீதி இடம்பெற்றதாக கருதப்பட்டால் உரிய சட்ட நடைமுறைகளை நாட நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
திலீபனின் தியாகத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல் அவரது நினைவை மதிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடுயாக உள்ளது.

சிலையை அகற்றிய பின்னர் ஓடி ஓடி கொந்தளித்தவர்கள், தங்களது உரிமைகளுக்காக போராடியவர்கள், சிலையை வைப்பதற்கு முன்னர் இதனை கருத்துடன் செய்திருக்கலாம், இந்த விடயத்திற்கும் NPP அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
சிலையை அகற்றிய பின்னர் மாநகர சபையில் ஒரு பிரேரணையை கொண்டு வந்து அந்த இடத்தில் சிலையை மீண்டும் வைப்பதற்கான வேலைத்திட்டங்களையும் செய்திருக்கலாம்.
இதை தவிர்த்து போலியாக மாற்றவர்களை சாடுதல் மற்றும் தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புதல் உள்ளிட்ட வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த விடயம் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |