மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுப்பட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்து எமது உணர்வுகளை அடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா தெரிவித்துள்ளார்.
தடுப்புச் சட்டத்திற்குள் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்த ஆண்டு இந்த வேலைகளை யாரும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பதற்காக கைதுகளை செய்திருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த 11-ம் மாதம் 26 27ஆம் திகதிகளிலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு 11 பேர் சிறையில் இருக்கின்றார்கள்.
மாவீரர்கள் தினம்
உண்மையிலேயே நகுலேஷ் அவர்கள் இறந்த மாவீரர்கள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கொடுத்ததற்கும், வாடகைக்கு வண்டி செலுத்தி தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு ஸ்பீக்கர் போன்ற பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் அதைவிட இன்னும் ஒரு மோசமான ஒரு நிகழ்வு கருவாக்கணியில் நடந்திருக்கின்றது.
இருவருக்கிடையிலே வாக்குவாதம் சண்டை ஏற்பட்டு இருக்கின்றது.
அந்த சண்டையிலே ஒருத்தர் காவல்துறை நிலையம் சென்று மாவீரர்கள் நிகழ்வுக்காக பணம் கேட்டதாக முறைப்பாடு ஒன்றை வேண்டுமென்று செய்திருக்கிறார்.
அவருக்கு எதிராகவும் ஒரு திட்டமிட்ட செயலாகத்தான் நான் பார்க்கின்றேன்.
ஏனென்றால் இந்த முறை 10 /12 பேரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குள் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்த ஆண்டு இந்த வேலைகளை யாரும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பதற்காக கைதுகளை செய்திருக்கின்றார்கள்.என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டம்
கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை புலிகள் சம்பந்தமான பதாகைகள் எதையுமே வைத்திருக்காமல் அவர்கள் தங்களுடைய உறவுகளை நினைவு கூறுவதற்காக சென்ற வேளையிலே அல்லது பங்கு பற்றிய வேளையிலே அவர்களை கைது செய்தது என்பது உண்மையிலேயே ஏற்க முடியாது ஒரு விடயமாக இருக்கின்றது.
அரசு சொல்லி இருக்கின்றது இந்த நாட்டிலே மரணித்தவர்களை தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பதாகைகள் அவர்களது கொடிகள் இல்லாமல் நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை.
என்று அரசாங்கமும் அதிபரும் கூறி இருக்கும் இந்த வேலையில் அப்படி எதுவுமே செய்யாமல் அந்த மாவீரர்களை நினைவுகூர்ந்தவர்களையும் அவர்களது பெற்றோர்களை கௌரவித்தவர்களையும் பேக்கரியில் கேக் விற்றவரையும் குடும்பச் சண்டையிலே ஈடுபட்டவர்களையும் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வது என்பது அதுவும் பயங்கரவாதத்தை கைது செய்வது ஏற்க முடியாது ஒரு விடயமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.
நினைவுகூர்வதற்காக உரிமை
இந்த நாட்டில் வடகிழக்கில் மாத்திரமல்ல இந்த முழு நாட்டிலுமே பிரச்சினைகள் உருவாகி இருக்கின்றது உரிமைகளை பெறுவதற்காக மக்கள் போராடி இருக்கின்றார்கள்.
மரணித்திருக்கின்றார்கள் அந்த வகையில் அவர்களை நினைவு கூறுவது என்பதை அரசாங்கம் எக்காரணம் கொண்டும் தடை செய்ய முடியாது.
அதேபோன்று எங்களது மக்கள் கூட நீங்கள் எத்தனை தடையை விதித்தாலும் அவர்களை நினைவு கூறுவதை விட மாட்டார்கள் என்பதை நான் மிகவும் ஆணித்தனமாக கூறிக் கொள்வது மாத்திரமில்லாமல் நான் கூட இன்று நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுதான் இருக்கின்றேன்.
அங்கு கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக நினைவேந்தி எனக்கும் எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு தற்போதும் நான் நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டு தான் வருகின்றேன்.
கைது செய்தவர்களின் உறவினர்கள்
அந்த வகையில் எங்களது மக்களது உணர்வுகளை நீங்கள் இந்த அரசோ அல்லது அரசாங்கமோ அல்லது பாதுகாப்பு படையோ மழுங்கடிக்கலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் .
கைது செய்தவர்களின் உறவினர்கள் மரணித்திருக்கின்றார்கள் அவர்களை நினைவுகூர்வதற்காக அவர்களது குடும்பத்தை நெருக்கடியாக்கி பயங்கரவாத தடை சட்டத்திற்குள் கைது செய்தமை ஏற்க முடியாத விடயம்.
எதிர்வரும் 21ஆம் திகதி அதிபர் அவர்கள் வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்கவிருப்பதாக இன்று மதியம் செய்தி அனுப்பி இருக்கின்றார்.
நிச்சயமாக 21ஆம் திகதி 3 மணிக்கு நாங்கள் அதிபரை சந்திப்போம் அவரிடம் நாங்கள் இந்த பிரச்சினையை மிகவும் ஆணித்தரமாக கூறுவோம்என்ன சொல்லுகின்றார் என்று பார்ப்போம் .
இருந்தாலும் அவரது கூற்று கூட அவரது உத்தரவுகள் கூட பாதுகாப்பு படையினாலும் மற்றும் அரசு அதிகாரிகளினாலும் நிறைவேற்றப்படுவதாக கடந்த காலங்களிலே எங்களுக்கு தெரியவில்லை இருந்தாலும் இந்த பயங்கரவாதத்தை திட்டத்திற்கு கீழே கைது செய்யப்பட்டு இருக்கும் இந்த எங்களது உறவுகள் சம்பந்தமாக 21ஆம் திகதி நாங்கள் அதிபருடன் பேசுவோம்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
|