இறுதிப்போரில் தகர்க்கப்பட்ட பாலம் : நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த அநுர
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் .
ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின் போது இன்று (02) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த அவர் புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் நண்பகல் அளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
வட்டுவாகல் பாலத்திற்கான நிர்மாணப் பணி
மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பாலத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்க வந்திருந்த ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் வரவேற்றிருந்தார்.
தொடர்ந்து பாலத்திற்கான நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மற்றும் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தெங்கு முக்கோண வலயம்
இதேவேளை வடக்கு தெங்கு முக்கோண வலயத்தினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று (02) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
தெங்கு முக்கோண வலயங்களுள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை ஆகிய இடங்கள் தெங்கு முக்கோண வலையங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
தென்னைப் பயிர்ச் செய்கையினை ஊக்குவிப்பதற்காகவும் பொருளாதாரத்தினை மேம்படையச் செய்யும் நோக்கிலும் இந்த செயற்றிட்டம் வடமாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கரில் செயற்படுத்தப்படவுள்ளது.
இதற்கான தென்னம்பிள்ளைகளை இலவசமாக வழங்கவுள்ளதுடன் மிகக் குறைந்த விலையில் மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




