இந்த ஆறுகளின் கரையோரங்களில் வாழும் மக்கள் அவதானம்: வெள்ள அபாய எச்சரிக்கை
கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றை அண்மித்த பல பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலாகும் வகையில் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (24.09.2026) அதிகாலை 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (25.09.2026) அதிகாலை 2.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
கிங் கங்கை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்ட அளவீடுகளின் அடிப்படையில், தவளம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய-திவித்துர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கை பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய வெள்ள நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம்
அதேபோன்று, நில்வளா கங்கை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலவும் நீர்மட்டத்தின் அடிப்படையில், பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட நில்வளா கங்கையின் வெள்ளப்பெருக்கு சமவெளித் தாழ்நிலப் பகுதிகளுக்கும் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் வாகன சாரதிகளும் நிலைமையை அவதானமாகக் கண்காணித்து செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |