அரியாலை கழிவு முகாமைத்துவ நிலைய விவகாரம் : வெளியான மற்றுமொரு அறிக்கை
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்னும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அரியாலை பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.
யாழ். அரியாலை, காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில், அரியாலை பசுமை இயக்கம் வெளியிட்டுள்ள பதிலறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ”அரியாலை மக்கள் திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பில் இதுவரை அமைதியாக இருந்தார்கள் என்றும், தற்போது அரசியல் காரணங்களுக்காக, நித்திரையில் இருந்து திடீரென்று எழும்பியுள்ளார்கள் என்பது போன்று சித்தரிக்க முயல்கின்றீர்கள்.
செயற்றிட்டத்துக்கு கடும் எதிர்ப்பு
நல்லூர் பிரதேச சபையினால், அரியாலை காரைமுனங்கில் குப்பை கொட்டுகின்ற வேலைத்திட்டம் முதன்முதலாக 2021இல் கொரோனா பெருந்தொற்றின் போது ஆரம்பித்தது.
மழைகாலத்தில் வெள்ளத்தில் மூழ்குகின்ற மயானத்தின் நிலத்தை உயர்த்துகின்றோம் என்னும் பெயரில் அனைத்து விதமான குப்பைகளையும் குழி தோண்டிப் புதைத்து நிலத்தை உயர்த்தும் பணியை தொடங்கியது.
அப்போது எமது மக்கள், குறிப்பாக இளைஞர்கள், கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது குறித்த செயற்றிட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம் குறித்த வேலைத்திட்டத்தை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இன்று, அரியாலை மக்கள் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை எனக் கூறுகின்ற நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தான், அன்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






