கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.
கோட்டாபயவின் இல்லத்திற்கு பிள்ளையானின் நெருங்கிய நண்பரான இனிய பாரதி அழைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் அங்கு சென்றபோது அசாத் மௌலானா, பிள்ளையனின் சகோதரர் மற்றும் அவரது முன்னாள் பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் அங்கு இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்ய வேண்டாம் எனக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் வெளிவந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச
அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தம்மைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் மனுவில் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச, தமக்கு அசாத் மௌலானாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவரைத் தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், கோட்டாபய தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அந்தக் கூற்று உண்மைக்கு புறம்பானது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோட்டாபய அசாத் மௌலானாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இனிய பாரதி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள சம்பவங்களை விளக்கியுள்ளார்.
அதன்படி, “ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நாளில், இனிய பாரதி என்பவருக்கு கபில ஹெந்தவித்தாரண என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இனிய பாரதியின் அறிக்கை
கருணா மற்றும் பிள்ளையன் ஆகிய இரு குழுக்களுடனும் பணியாற்றியதாகக் கூறப்படும் இனிய பாரதி, கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ளவர் கபில ஹெந்தவித்தாரண, இனிய பாரதியை மிரிஹானவில் உள்ள கோட்டாபயவின் இல்லத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், அதன்படி அவர் திருக்கோவிலிலிருந்து மிரிஹானவுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர் அங்கு சென்றபோது, அசாத் மௌலானா ஏற்கனவே அங்கு இருந்ததுடன், பிள்ளையனின் செயலாளராகப் பணியாற்றிய பிரசாந்தன், பிள்ளையனின் சகோதரர், முன்னாள் பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலரும் அங்கு இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |