விஜய்யின் திருச்சி கூட்டத்தில் சட்ட மீறல்கள்! வழக்குகளை தொடர்ந்த தமிழ்நாட்டு காவல்துறை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் திருச்சி பிரசாரம் நிபந்தனைகளை மீறி நடந்த பேரணியாக மாறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான, நகரத் தலைவர் குடமுருட்டி கரிகாலன், மாவட்ட மகளிர் பிரிவுத் தலைவர் ஏ. துளசிமணி, சட்ட பிரிவைச் சேர்ந்த ஆதித்ய சோழன், இமய தமிழன், விக்னேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் தனது சிறப்பு வாகனத்தில் பிரசார இடத்தை நோக்கிச் செல்வதைக் காண முயன்றபோது, ஒரு கும்பல் சில பகுதிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று வழக்குகள்
மரக்கடையில் உள்ள ஒரு தளபாடக் கடையில் பொருட்களை சேதப்படுத்தியதாகவும், கடைக்காரரை வன்மறைக்கு உள்ளாக்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஸ்ரீரங்கத்தில் ஆறு இடங்களில் சட்டவிரோதமாக பதாகைகளை அமைத்ததற்காக, தமிழ்நாடு திறந்தவெளி (சிதைவைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் காவல்துறையினராலும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் டிவிகே தலைவர் விஜய் அல்லது பொதுச் செயலாளர் பஸ்ஸி என் ஆனந்த் ஆகியோர் குற்றம் சாட்டப்படவில்லை என்பதை வலியுறுத்திய காவல்துறையினர், ஏனைய மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
