இலங்கை ரூபாய் மட்டுமே சட்டப்பூர்வமானது - மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு
இலங்கை ரூபாய் மட்டுமே உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக உள்ளது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கிரிப்டோகரன்சி உலகளவில் மெய்நிகர் நாணயத்தின் ஒரு வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், இலங்கை அதை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
"அனைத்து உள்நாட்டு பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று கூறிய, பிற நாணயங்களில் எந்தவொரு கட்டணமும் செலுத்த அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் முன் ஒப்புதல் தேவை என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நிர்வகிக்கும் சட்டம் இல்லை
ஏற்றுமதி வருமானம் ஈட்டுபவர்களுக்கு அமெரிக்க டொலர்களில் சில பரிவர்த்தனைகளை நடத்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை வழங்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஏற்பாட்டுக்கு வெளியே, நாட்டிற்குள் உள்ள அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் ரூபாயில் இருக்க வேண்டும். இலங்கையில் தற்போது கிரிப்டோகரன்சியை நிர்வகிக்கும் சட்டம் இல்லை.
சில தனி நபர்கள் பல்வேறு வழிகளில் டிஜிட்டல் சொத்துக்களைப் பெற்றிருந்தாலும், மத்திய வங்கி கிரிப்டோகரன்சியை செல்லுபடியாகும் முதலீட்டு கருவியாக அங்கீகரிக்கவில்லை.
கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகள் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட சொத்து வகைகள் போலல்லாமல், கிரிப்டோகரன்சி நிதி ஒழுங்குமுறையின் எல்லைக்கு வெளியே உள்ளது.
இலங்கை ரூபாயை மட்டுமே செல்லுபடியாகும் நாணய அலகாக சட்டம் அங்கீகரிக்கிறது என்றும், கிரிப்டோகரன்சியை எந்த வகையான கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்த முடியாது என்றும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
