தமிழின அழிப்பு நினைவாலய செயல் வடிவத்தை முன்னெடுப்பதில் சவால்
2021 ஜனவரியில், தாயகத்தில், யாழ் பல்கலைக்கழகத்தில், அமைந்திருந்த தமிழின அழிப்பு நினைவாலயம், சிறிலங்கா அரசின் ஏவுதலில், அதன் இராணுவப் படைகளால் இடித்து அழிக்கப்பட்ட போது, எழுந்த எழுச்சியின் வடிவமாகவே கனடாவின் பிரம்ரன் நகரில், அதன் பிரதான பூங்காவில், தமிழின அழிப்பு நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான முனைப்புகள் முடுக்கிவிடப்பட்டன.
அதற்கு முழுமையான அனுசரணையை, கனடாவின் பிரதான நகர சபைகளில் ஒன்றான, பிரம்ரன் நகரசபை ஏகோபித்து வழங்க, அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. பிரம்ரன் நகரின் பிரதான தமிழ் அமைப்புக்களான, பிரம்ரன் தமிழ் ஒன்றியமும், பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகமும், இதன் ஆரம்ப அமைப்புக்களாக அமைந்தன.
ஆனால் இவ்விசேட செயல் வடிவத்தை முன்னெடுப்பதில் உள்ள, சவால்களையும் இதன் தொடர்ச்சியான முன்னெடுப்புக்களையும் கருத்தில் கொண்டு இதற்காக இதன் செயல்பாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் ஒரு புதிய கட்டமைப்பின் தேவை அடையாளம் காணப்பட்டு, அதற்காக தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பு உருவாக்கம் கண்டது.
அதற்கான பின்புலக்காரணிகள் வருமாறு,
1. இச்செயற்பாட்டு முன்னெடுப்பிற்கான நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுப் கொள்ளும் வகையிலான உலகளாவிய நிபுணர்கள் குழு ஒன்றின் உருவாக்கமும், அவர்களின் தொடர்ந்த இணைப்பும்.
2. ஏற்கனவே அரச நிதியுதவிகளை தமது செயற்பாடுகளுக்காக பெற்றுவரும் பிரம்ரன் தமிழ் அமைப்புக்களின் வருடாந்த வரவுசெலவுத்திட்ட அறிக்கையில் எவ்விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாதவகையில் இனவழிப்பு நினைவாலய நிதிசேகரிப்பிற்கான தனித்துவமான வங்கிக்கணக்கு.
3. நினைவாலய ஆரம்ப நிர்மாணத்தைக் கடந்தும், பல வருடங்களாக தொடர்ந்தும் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமையும் இதற்கான நிர்வாகக்குழுவும், இதற்கான யாப்பும், அதில் இளையோரின் பங்களிப்பும் தொடர்ந்த பாரப்படுத்தலும். (பிரம்ரன் நகரசபையிலும், பிரம்ரன் தமிழ் அமைப்புக்களின் நிர்வாகசபையிலும், மாற்றங்கள் தொடர்ச்சியானவை. அது நீண்டகாலம் நிலைத்திருக்க நிர்மாணிக்கப்படும் இனவழிப்பு நினைவாலயத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது பார்த்துக்கொள்வதன் அவசியம்)
4. தமிழின அழிப்பு நினைவாலயத்தைப் பார்வையிடுவோர் அது குறித்த விரிவான விபரங்களிற்காக பொறிக்கப்படும் கியூஆர் கோட்டினூடாகச் இணையும் தமிழின அழிப்பு நினைவாலய இணையத்தளமும் அதற்கான தொடர்ச்சியான பராமரிப்பும் மேலதிக உள்ளீடுகளும்.
5. பிரம்ரன் நகரைப் போன்று ஏனைய நகரங்களிலும், நாடுகளிலும் தமிழினவழிப்பிற்க்கான உலகளாவிய அங்கீகாரத்தை நோக்கி அமைக்க முயலும் அனைத்துத் தமிழின அழிப்பு நினைவாலய நிர்மாண முயற்சிகளிற்கும் நிபுணத்துவ மற்றும் மொழிசார் இணையத்தள வசதிகளையும் வழங்குதல்.
சந்தர்ப்பம்
மேற்கண்ட அதியுச்ச தேவைகளின் அடிப்படையிலேயே அமைந்தது தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பு. இதன் முதல் நிர்வாக சபையின் தலைவராக பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகத்தின் தலைவரும், செயலாளராக பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் தலைவரும் 2021ம் ஆண்டு நடுப்பகுதியில் நியமிக்கப்பட்டனர்.
அத்துடன் பல்வேறு துறைசார் வல்லுனர்களும் வேறு இணைக்கப்பட்டனர். இச்செயற்பாட்டிற்கான இனம் சார்ந்த ஆதரவைக் கோரியபோது கனடாவின் பிரதான தமிழ் அமைப்புக்கள் பலவும் தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பிடம், தமது முழுமையான ஆதரவை எழுத்துவடிவில் வழங்கியிருந்தன.
70க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்களை உள்ளடக்கிய வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும், தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பையும் தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், அமெரிக்காவின் பெருநகரான நியூயோர்க்கில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 35ஆவது பெருவிழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தமிழின அழிப்பு நினைவாலய காணொளியைக் காண்பித்ததுடன் அதற்கான விளக்கத்கை வழங்கவும் சந்தர்ப்பம் வழங்கினர்.
வரைகலை அமைப்பு போட்டி
சமாதான முயற்சிக்காலத்தில் உலகப்பரப்பு எங்குமிருந்தும் வன்னி சென்று தம் நிபுணத்துவ ஆற்றலினூடாக எம் மக்களின் தேவைகளை சிறப்புற கவனித்துக் கொண்ட துறைசார் வல்லுநர்கள், 2009ம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் எம் மக்களுக்கான இச்செயற்பாட்டிலும் ஒன்றாக உலகளாவி இணைந்தனர்.
2021 ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே தமிழின அழிப்பு நினைவாலயத்திற்கான வடிவத்திற்காக ஒரு உலகளாவிய வரைகலைப் போட்டி ஒன்றை நடாத்துவது என்று தீர்மானித்து அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன.
சிறந்த சர்வதேச தரத்திலான இன அழிப்பு நினைவாலய வடிவம் ஒன்றை பெற்றுக் கொள்ளல், தமிழின அழிப்புக் குறித்த விழிப்புணர்வொன்றை சர்வதேச ரீதியாக அதுவும் குறிப்பாக சர்வதேச பல்கலைக்கழகங்களில் உருவாக்குதல் என்பன இவ்வாறான போட்டி ஒன்றை நடாத்துவதற்கான காரணிகளாக அமைந்தன.
அது குறித்த ஆய்வுகளில் ஐரோப்பாவில் அமைந்துள்ள பீபிரீடேர்ஸ் என்ற இத்துறையில் சர்வதேச பிரபல்யம் வாய்ந்த வரைகலை அமைப்பு போட்டியை நடாத்துவதற்கான செலவு, மற்றும் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகை ஆகியவற்றை தாமே பொறுப்பெடுத்து அப்போட்டியை நடாத்தினர்.
நிர்வாகசபை உறுப்பினர்கள்
அவர்கள் பெற்றுக் கொண்ட நூற்றுக்கணக்கான வரைகலை வடிவங்களில் இருந்து அவர்களின் நிபுணத்துவ நடுவர்கள் 23 நாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 40 வரைகலைகளை இறுதித் தேர்விற்காக எம்மிடம் சமர்ப்பித்தனர்.
நாம் அமைத்த 13 பேரைக் கொண்ட சர்வதேச ரீதியிலான தமிழர் நிபுணத்துவக் குழவினர், அதிலிருந்து வெற்றியாளர்களை தெரிவு செய்தனர். முதலிடத்தில் எம்மைப் போன்று இன அழிப்பை எதிர்கொண்ட பொஸ்னியா கெஸ்கக்கோனியா நாட்டைச் சேர்ந்த வரைகலை நிபுணத்துவ சகோதரி ஒருவர் தெரிவானார்.
இறுதிப்போட்டிக்குத் தெரிவான 40 வரைகலை நிபுணர்களும் உலகின் முன்னணி நாடுகள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.
வரைகலைப் போட்டி விதிகளின்படி வெற்றியாளர் தமது வடிவத்திற்கான உரிமத்தை எமக்கு வழங்க, எமது வரைகலை நிபுணர்கள் எமக்கான விடயங்களையும் அதில் சேர்க்க, எமது தமிழின அழிப்பு நினைவாலய வரைகலை வடிவம் உருவாகியது.
அது பிரம்ரன் நகரசபையின் நிர்வாக சேவையின் ஒப்புதலுக்காக மார்ச் 2022 இல் வழங்கப்பட்டது. இதற்கு இடைப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் நினைவாலய கட்டுமானம் குறித்து 15க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் இணையவழிச் சந்திப்புகளை நகரசபையின் துறைசார் வல்லுனர்களுடன், தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பின் நிபுணத்துவ மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அத்துடன் 50க்கு மேற்பட்ட மின்னஞ்சல் கருத்துப் பரிமாற்றங்களும் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்றிருந்தன.
நகரசபை விதிகளை உள்ளடக்கிய சில மாற்றங்களையும் உள்வாங்கி, இறுதிவடிவம் பெற்ற நினைவாலயத்திற்கான நிர்மாண வடிவத்தை பிரம்ரன் நகரசபை அங்கீகரிக்க, அதன் முப்பரிமாண மாதிரி வடிவத்தை யூன் 22ஆம் நாள் 2022 ஆம் ஆண்டு பிரம்ரன் நகரசபையில் வைத்து திறந்து வைப்பதற்கான அழைப்பிதழ் நகரசபை முதல்வர் பற்றிக் பிரவுன் மற்றும் ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பினால் அனுப்பிவைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் பிரம்ரன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகத்தின் புதிய தலைவர்களும் கலந்து கொண்டனர். தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பின் உப தலைவரும், ஒட்டாவா கால்டன் பல்கலைக்கழக பொறியியல்துறை பேராசிரியருமான சிவா சிவதயாளன் அங்கு சிறப்புரை ஆற்றியிருந்தார்.
இந்நிலையில் நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்கு தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பிற்கும், பிரம்ரன் நகரசபைக்குமிடையே நீண்டகால அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டாக வேண்டும்.
புதிய தலைவர்கள்
இது குறித்தும், இதில் உள்ளடக்கப்படவேண்டிய சரத்துக்கள் குறித்தும், பல பேச்சுவார்த்தைகள் இரு தரப்புமிடையே நடைபெற்றிருந்தன.
அது குறித்த விபரங்களை நாம் எழுத்து வடிவத்திலும் சமர்ப்பித்திருந்தோம். அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினாலும், பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகத்தினாலும் உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பிற்கும், பிரம்ரன் நகரசபைக்குமிடையிலேயே அமைய வேண்டும் என்பதுவும் அறிவுறுத்தப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று யூன் 2022 இலும், அது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்ற அறிவித்தல் ஒக்டோபர் 3ஆம் நாள் 2022 இலும் எமக்கு பிரம்ரன் நகரசபையால் எழுத்துமூலம் அறியத்தரப்பட்டது.
இந்நிலையில் பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் தற்போதைய தலைவரால் சவால்கள் உருவாக்கப்பட்டன. இனத்திற்கான இப்புனிதப் பணியில் எம்மிடையே குழப்பங்கள் தவிர்க்கப்பட்டாக வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தி பிரம்ரன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகம் ஆகியவற்றின் தற்போதைய தலைவர்களையும் தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பின் நிர்வாக சபையில் இணைத்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் அவர்கள் இடத்திற்கு தெரிவாகும் புதிய தலைவர்களை அவர்கள் இடங்களில் இணைத்துக் கொள்வதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனினும் அதற்கு பின்னர் திடீரென எம்முடனான தொடர்புகள் பிரம்ரன் நகரசபையால் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் சனவரி 2023 இல் பிரம்ரன் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு பிரம்ரன் நகரசபை முதல்வர் பற்றிக் பிரவுன் அவர்களை நேரடியாக சந்தித்து அனைத்தையும் விரிவாக விளக்கினோம்.
மிரட்டல்
அன்றைய காலத்தில் வேண்டுமென்றே சில தரப்புகளால் எழுப்பப்படும் விசமத்தனமான பரப்புரைகள் குறித்தும் விளக்கியிருந்தோம். அச்சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் தற்போதைய தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படட்டது.
ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. எம்முடன் அச்சந்திப்புக்கு வருவதாக இருந்த சிலருக்கு குழப்பவாதிகளால் அழைப்புகள் விடுக்கப்பட்டு எம்முடன் அச்சந்திப்பிற்குசெல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களாக தம்மைப் புதிதாகக் காட்டிக் கொள்வோர் சிலர் இதன் பின்புலத்தில் இருந்தமை எமக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நினைவாலய செயற்பாடுகளில் எவ்வித ஈடுபாட்டையும் காட்டாதவர்கள், திடீரென இது குறித்த அனைத்து விவகாரங்களிலும் தமது முகத்தை வெளிக்காட்டாது ஆதிக்கம் செலுத்த முனைந்தனர்.
அத்துடன் தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பின் பிரதான பொறியிலாளருக்கும் 2023 பங்குனி 20ஆம் நாள் தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டலும் விடுக்கப்பட்டது.
நினைவாலய வடிவம்
தமிழ் தேசிய செயற்பாடுகளில் 2009 இற்குப் பின்னர் நிலவும் குழப்பநிலையை, நம்பகத்தன்மையற்ற சூழலை கவனத்தில் கொண்டு இச்செயற்பாட்டில் பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை மற்றும் இரகசியக்காப்பு என்பனவற்றை எவ்வித விட்டுக்கொடுப்பும் இன்றிப்பேணுதல் என்பதில் உறுதியெடுத்து இன்றுவரை அதைப்பேணிப்பயணிக்கும் எமக்கு யாராலோ இயக்கப்படும் இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் ஏற்படுத்திய சவாலை அடுத்து, இது குறித்த செய்திகளை தமிழ் அமைப்புகளிடம் பகிர்ந்து கொண்டோம்.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் பல்லாயிரத்தில் பாலகர்கள், சிறுவர்கள், இளையோர், மூத்தோர், ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் வயது வேறுபாடின்றி இனப்படுகொலைக்குள்ளான எம் உறவுகளுக்காக நாம் நிர்மாணிக்க முயன்ற இன அழிப்பு நினைவாலயத்தை எம்மத்தியில் வாழும் சில வேசதாரிகள் இல்லாதொழிக்க முயன்றபோது இதில் தலையிட்டு தீர்வு காணப்பலர் தனிப்பட்ட ரீதியிலும், அமைப்புக்களாகவும் முயன்றனர், முயன்றும் வருகின்றனர்.
அனைவரின் முயற்சியிலும் நாம் வெளிப்படையாக ஒரு பங்காளியாக முழுமையான ஒத்தாசையையே வழங்கினோம். ஆனால் சிதைப்பை ஏற்படுத்தியவர்கள் ஓடி ஒளித்து கதைகளையே புனைகின்றனர்.
பங்களிப்புத்தொகை
கனடாவின் நீண்டகால சவாலான வெளிநாட்டுத் தலையீடுகள் இதிலும் பின்புலமா? என்ற கேள்வியே எமக்குப் பலவேளைகளில் எழுந்தது. நாம் உருவாக்கிய நினைவால வடிவம் சிங்களத்தின் தாமரை வடிவம் என்று குழப்பம் விளைவிப்போர் தம்முகத்தை மறைத்து புரளி கிளப்பினர்.
இந்தியாவிலும் உள்ள தாமரை அரசியல் சின்னத்தை ஏன் மறைக்கின்றீர்கள். 2022 இல் நாம் எம் மக்களுக்காக வெளியிட்ட மடல் ஒன்றில் இது தமிழர்களின் புராதன மலரான காந்தள் வடிவத்தில் அமைந்தது எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
மலர்களில் காந்தள் மலருக்குத் தான் 6 தனித்துவமான இதழ்கள் உண்டு. தாமரைக்கு அல்ல. அதனால் தான் காந்தள் ஈழத்தமிழர்களின் தேசிய மலருமானது. தமிழின அழிப்பு நினைவாலய நிர்மாணத்திற்கு என நிதிப்பங்களிப்பை நாம் வேண்டிய போது அதற்கான எமது வங்கிக் கணக்கில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் சற்று அதிகமான கனடிய டொலர்களை எமது உறவுகள் வைப்பில் இட்டுள்ளீர்கள்.
நிதிப்பங்களிப்பு செய்தவர்களுக்கு உடனடியாக எமது கணக்காய்வாளர் பற்றுச்சீட்டுக்களை அனுப்பி வைத்திருந்தார். உங்கள் தனிப்பட்ட விபரங்கள் எதையும் வெளியிடாது உங்கள் பற்றுச்சீட்டின் இலக்கம், உங்கள் பங்களிப்புத்தொகை மட்டுமே எமது இணையத்தளத்தில் உங்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இனவுணர்வு
எமது முக்கிய உறுதிமொழியான பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, இரகசியக்காப்பு விடயங்கள் இங்கும் எம்மால் பேணப்பட்டுள்ளன.
இதைக்கடந்தும் நிர்மாணத்திற்குத் தேவையான மேலதிக பணத்தை வழங்குவதற்கு தமிழ் வர்த்தகர்களும், வர்த்தக நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் எமக்கு முழுமையாக உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர்.
ஆனால் இதுவரை நீங்கள் வழங்கிய பணத்தில் இருந்து ஒரு சதத்தைக் கூட நாம் செலவீனங்களுக்காக பயன்படுத்தவில்லை. அதேவேளை பல்லாயிரத்தில் இதுவரை அமைந்த செலவீனங்களை மண் ஆய்வு உட்பட எமது நிர்வாக சபை உறுப்பினர்கள், எமது நிபுணர்கள், செயற்பாட்டாளர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இம்முயற்சியில் அவர்கள் செலவிட்ட விலைமதிக்கமுடியாத அந்த நீண்ட நேரங்களை இனவுணர்வுடன் நாம் ஆழ்மனதில் கொள்கின்றோம்.
எம்முடன் இப்பணிகளில் சேர்ந்து அரும்பணியாற்றிய அன்ரன் பிலிப் சின்னராசா அவர்கள் கடந்த பெப்பிரவரி மாதம் சடுதியாக எம்மை விட்டு பிரிந்து இறையடி சேர்ந்தார்.
பெரும் கவலை
1983 தமிழினப்படுகொலைகளின் போது வெலிக்கடைச்சிறையில் உயிர்தப்பிய அரசியல் கைதிகள் சிலரில் அவருமொருவர்.அமைக்கப்பட இருந்த நினைவாலயத்தில் பொறிக்கப்பட வேண்டிய வாசகத் தொகுதிகளை நிபுணர் குழு ஒன்றை அமைத்து இறுதி செய்தவரே அவர்தான்.
அவர் காலத்தில் இப்பணியை முடிக்கவில்லையே என்ற பெரும் கவலை எமக்குண்டு. எனினும் அதற்கு பின்னரும், 2023 ஏப்ரல் 14 ஆம் நாள் கடந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பிற்கும், பிரம்ரன் நகரசபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் எமக்கு கிடைக்கப்பெற்றது. அது குறித்த சட்டவியல் ஆலோசனைகளை நாம் எமது வழக்கறிஞரிடம் கோரியிருந்த நிலையில், சில நாட்களிலேயே அப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மீளப்பெறப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டது.
அது பின்னர் பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பெயரில் மட்டும் மாற்றி வழங்கப்பட்டமை ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் எமக்கு ஏற்படுத்தியது.
தமிழர்களை பிரித்து எம்மிடையேயான பிளவுகளே காரணம் எனக்காட்டி, எம் மக்களின் இன அழிப்பு நினைவாலய நிர்மாணத்தில் குழப்பம் விளைவிக்க முயல்வோருக்கு நாம் பலியாகிப் போகிறோமா? என்ற பெரும் கவலை எமக்கு ஏற்பட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கை
பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பெயரில் மட்டும் அனுப்பி வைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு 2023 மே மாதம் 7ம் நாள் பதில் அனுப்பிய பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் தற்போதைய தலைவர், தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பு வழங்கி பிரம்ரன் நகரசபை ஏற்கனவே ஏற்றுக் கொண்ட நினைவாலய வடிவத்தை தவிர்த்து தாம் ஒரு புதிய வரைகலை வடிவத்தை உருவாக்க இருப்பதாகவும், அதனால் முன்பு மே 18 நாள் தான் நடாத்துவதாக கூறிய கட்டுமானத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வை நிறுத்துவதாகவும் அறிவித்திருந்தார்.
அதற்கு அதுவரை தாம் காத்திருப்பதாக பிரம்ரன் நகரசபை சார்பிலும் பதில் அளிக்கப்பட்டிருந்தது. இது நினைவாலய அமைப்புக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாது அனைத்து நினைவாலய கட்டுமான பணிகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டது.
நகரசபை நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, கட்டுமாணத்திற்கான ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்பந்தமிடப்பட்டு, அது நகரசபைக்கு அடையாளப்படுத்தப்பட்டு நிர்மாணத்திற்கான கால அட்டவணை ஒன்று வழங்கப்பட்டே அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளமுடியும்.
போலித்தேசியவாதிகள்
ஆனால் இவை எதுவும் அமையாமல் எவ்வாறு மே 18, 2023 இல் ஒரு அங்குரார்ப்பன நிகழ்வு நடாத்தப்பட்டது? மேற்கண்ட காரணங்களால் அந்நிகழ்வை படம் எடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்றே நகரசபையால் வர்ணிக்கப்பட்டது.
நகரசபை முதல்வர் உட்பட ஏனையோர் யாரால் இங்கு தவறாக வழிநடத்தப்பட்டனர்? சுமூகமாக எமது சமூகத்திற்கு பெருமைதரும் வகையில் அமையவேண்டிய விடயம் இவ்வாறு அசிங்கப்படுத்தப்படுவது பெரும் துயர் தருகிறது. நாளை நினைவாலயம் கட்டமுடியாமல் போனதற்குக் காரணம் எமது சமூகத்தின் சிதைவு எனக்காட்டி தப்பிக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும்.
தமிழின அழிப்பு நினைவாலயம், இவ்வாண்டு மே 18 ஆம் நாள் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைப்பது என்ற இலக்குடனேயே நாம் பயணித்தோம். இது குறித்து நாம் நகரசபையுடன் பகிர்ந்து கொண்ட விபரங்களும் அவர்கள் குறிப்பிலேயே உண்டு.
ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தள்ளிப் போக, கறுப்பு யூலை நாளிலாவது திறக்கும் வகையில் செயல்படலாம் எனத் தீர்மாணித்தோம். ஆனால் இதுவரையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படாமல் போலித்தேசியவாதிகளின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கை
இந்நினைவாலய கட்டுமாணத்தை கட்டாமல் தடுத்துவிட சிங்களம் கடுமையாக முயன்றது. இப்போது அவர்கள் எதுவும் செய்யாமலேயே அவர்களின் விருப்பம் பூர்த்தி செய்யப்படுகிறது. இது எவ்வளவு பேரவலம் பாருங்கள்.
இதற்குப் பின்னரும் கனடியத் தமிழர் சமூகம் விழித்துக் கொள்ளவில்லையானால் எம்மை ஏமாற்றிப் பயணிக்கும் இவ்வாறான போலித்தேசியவாதிகளுக்கும், யாரோ சில எசமானர்களுக்கு விசுவாசமான அடிமைகளுக்கும், நாம் இங்கும் பலியிடப்பட்டவர்களாகிவிடுவோம்.
ஆகஸ்ட் 23 ஆம் நாள் 2023 இல் நாம் விரிவான மடல் ஒன்றை இதில் சம்மந்தப்பட்ட பிரம்ரன் நகரசபை முதல்வர், உறுப்பினர்கள் மற்றும் நகரசபை அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். (அதன் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) அதற்கு உரிய பதில் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நிதிப்பங்களிப்பு செய்த எம் உறவுகளுக்கு அவ்வாறே நாம் பேணிப்பாதுகாக்கும் உங்கள் பணத்தை உங்களிடம் மீள்கையளிக்கும் விபரத்தை தனிப்பட்ட முறையில் அனுப்பி வைப்போம்.
காலம் கடந்து செல்ல கட்டுமான செலவீனங்களும் அதிகரித்தே செல்கின்றன. எம்மக்களின் பணத்தில் ஒரு சதம் கூட விரயமாகக்கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தும் எமக்கு இவை பெரும் துயர் தருகிறது.
பிரம்ரன் நகர் கடந்தும் நினைவாலயக் கட்டுமாணம் குறித்து சில நகரங்கள் சார்ந்த எம் உறவுகள் முயற்சிகளில் உள்ளனர். அவர்களுக்கான ஒத்தாசைகளை, நிபுணத்துவ உதவிகளை நாம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றோம்.
எமது இனம் சார்ந்த இம்முயற்சியில் இதுவரை எங்களுடன் சேர்ந்து பணித்த எமது உறவுகளின் நேசமுள்ள பாசக்கரங்களை பேரன்புடன் இறுகப்பற்றிக் கொள்கின்றோம். எம் கையில் உள்ள தமிழின அழிப்பு நினைவாலய வடிவம் உரிமத்திற்கு உரியது.
அதை யாரிடமும் அவ்வாறே கையளித்துவிட முடியாது. இதை எங்காவது கட்ட விரும்புபவர்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளும் பட்சத்தில், அவர்களுடன் பேசி உரிய முறையில் அது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு, அதை அவர்கள் கட்ட நாம் அனுமதிப்போம்.
ஒன்றாக இணையும் கைகள் எத்தகைய சவால்களையும் உடைத்தெறிந்து பயணிக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் பயணிப்போம்.