வடக்கு கிழக்கு மக்களின் ஆணை : நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஆதரவு – இரா. சாணக்கியன்
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் (ITAK) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று (07.05.2025) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “ 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியானது வடக்கு கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது.
அமோகமான வெற்றி
நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைவாக வடக்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள்.
இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்திற்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்.
அந்தவகையிலே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கின்றோம்.
இலங்கை தமிழரசுக் கட்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம்.
அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.
இன்று மூன்று நாடாளும்னற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாட இருக்கின்றோம்.
நாளை (08.05.2025) நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர், பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாட இருக்கின்றோம்.
எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
