இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியது சீன உரக்கப்பல்
சீனாவில் இருந்து பக்ரீறியா கிருமிகளைக் கொண்ட உரத்தை ஏற்றிய சரக்குக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சேதன உரத்தை இறக்குமதி செய்வதற்கு எதிரான ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அமைச்சர் சட்டமா அதிபர் ஊடாக இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து நகர்ந்து வருவதாக சீன நிறுவனமான சிங்தோ பயோடெக் குரூப் கம்பனி லிமிட்டெட், ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் அளுத்கமகே சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி நிர்மலன் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சேதன உரத்தை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு ஸ்ரீலங்கா விவசாய அமைச்சர் எடுத்த முடிவை மீளெடுக்குமாறு உத்தரவிடக் கோரி சி.ஈ.ஜே எனப்படும் சுற்றுச்சூழல் நீதி மையம் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த மனுவை ஆதரிப்பதற்கு ஏதுவான விடயங்களை முன்வைப்பதற்கு எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளை உள்நாட்டில் சேதன உரங்களை உற்பத்தி செய்வதற்கான முறையான பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிடுமாறு மனுதாரர்கள் தமது மனுவில் மேலும் கோரியுள்ளனர்.
இலங்கையில் சேதன உரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், இரசாயன உர மானியத்தில் சேமிக்கப்படும் பணத்தில் விவசாயிகளுக்கு பயிர் இழப்புக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் முதலில் உறுதியளித்தது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கென 96 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய, விலை மனுக் கோரப்பட்டதாகவும் மனுதாரர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கைக்கு 63 மில்லியன் டொலர்கள் செலவில் சுமார் 96 ஆயிரம் மெற்றிக் தொன் சேதன உரத்தை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம், சீனாவின் சிங்தோ பயோடெக் குரூப் கம்பனி லிமிட்டெட்டிற்கு வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இறக்குமதி செய்யப்படவிருந்த சீனாவின் சேதன உரமானது இலங்கையில் விவசாயப் பேரழிவை உருவாக்கும் என விவசாய நிபுணர்கள் எச்சரித்ததாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த மாதிரியில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதை விவசாய அமைச்சகமும் உறுதிப்படுத்தியது எனவும் மனுதாரர்கள் தமது எழுத்தாணை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனுதாரர் சார்பில் மூத்த சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே முன்னிலையாகியிருந்தார்.
