சீண்டும் அமெரிக்கா - தாய்வான் கடற் பரப்பில் பதற்றம்! அசுர வேகத்தில் போர் பயிற்சியில் இறங்கிய சீனா
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றுமுன்தினம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டதை அடுத்து, அத்தீவுக்கு அருகில் சீனா கடுமையான போர்ப் பயிற்சிகளை நடாத்தியுள்ளது.
இது சீன தாய்வான் கடற்பரப்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்துடன் குறித்த பதற்றம் ஆரம்பித்திருந்தது.
நான்சி பெலோசியின் தாய்வான் விஜயம்
நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அண்மையில் தாய்வானுக்குச் சென்றிருந்தார். இது மிகவும் ஆபத்தானது என்றும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் "நெருப்புடன் விளையாடுகிறார்" என்றும் சீனா விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாய்வானின் துடிப்பான ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மதிப்பதாகவே தனது பயணம் அமைந்திருப்பதாகவும், அமெரிக்க கொள்கைக்கு முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி அறிவித்தார்.
பெலோசியின் விமானம் தைவானில் வந்திறங்கி ஒரு மணி நேரத்திற்குள், தமது இராணுவம் இந்த வார இறுதியில் தாய்வானைச் சுற்றி வான் மற்றும் கடலில் தொடர்ச்சியான இராணுவப் போர் ஒத்திகைகளை நடத்தும் என்று சீனா அறிவித்தது.
இந்தப் பயிற்சியில் உண்மையான குண்டுகள் பயன்படுத்தப்படும் என்றும், இந்தப் பகுதிகளுக்குள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைய வேண்டாம் என்றும் சீனா எச்சரித்தது.
நான்சி பெலோசியின் தாய்வானில் வந்திறங்கியபோது, சீனாவின் பெருநிலப்பரப்புக்கும் தாய்வானுக்கும் இடையே உள்ள தாய்வான் ஜலசந்தியை சீனாவின் இராணு விமானங்கள் கடந்து சென்றதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன. இருப்பினும் தாய்வான் அப்போது அதை மறுத்தது. பின்னர் 20 இராணுவ விமானங்கள் தாய்வானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் வந்ததை ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையே ஆழமான பொருளாதாரப் பிணைப்பு இருக்கும் நிலையில், பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவானின் பல்வேறு பொருள்களுக்கு சீனா தடை விதித்தது.
தீவிர போர் ஒத்திகையில் சீனா
இதேவேளை, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் விஜயத்திற்கு பின்னர் தாய்வான் எல்லையில் திடீரென்று தீவிர போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டது.
அதிநவீன ஏவுகணைகளை ஏவி கடும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. குறித்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னரும் ஒத்திகையை நீட்டித்து வந்தது.
BREAKING NEWS : #China's #military continues to fire #PCL191 multiple #rocket launcher systems (#MRLS) from #Xiamen Island, #Fujian, into the #Taiwan Strait. At the same time, it was reported that Taiwanese fishermen see #Chinese #missiles fly over Taiwan's airspace. pic.twitter.com/OKTxhUAu3K
— World Military News (@Military_News4) August 4, 2022
பதிலுக்கு தாய்வானும் பீரங்கி பயிற்சியை முன்னெடுத்தது. மட்டுமின்றி, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாவும் தாய்வான் இராணுவம் பதிலடி அளித்திருந்தது.
இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்க நாடாளமன்ற உறுப்பினர்கள் தாய்வானுக்குச் சென்றுள்ளதால் தாய்வானைச் சுற்றியுள்ள கடற் பகுதியிலும் வான்வெளியிலும் சீனாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் நேற்று போர்ப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் திட்டம் - அமெரிக்காவின் நோக்கம்
தாய்வான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.
சீனா தாய்வானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க இராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என வல்லுநர்கள் பலர் கூறி வருகின்றனர்.
இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான "first island chain" என்றழைக்கப்படும் பட்டியலில் தாய்வான் முக்கியான இடத்தில் உள்ளது.
தாய்வான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை.
உலகின் வல்லரசு நாடாக வேண்டும் என்பதே சீனாவின் தற்போதைய முக்கிய நோக்கமாக காணப்படுகிறது. தொடர்ந்தும் தானே வல்லரசாக இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் முயற்சி.
தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தாய்வானை கைப்பற்ற வேண்டியது சீனாவிற்கு அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்கு தற்போது அமெரிக்கா தடையாக காணப்படுகிறது.
தாய்வானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா முயற்சிக்காது என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்கா தாய்வானுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்த்து வருகிறது. அதனுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்ற போதிலும், தாய்வான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதேவேளை, தாய்வான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தாய்வானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளமையும் அமெரிக்கா தாய்வானுக்காக களமிறங்கும் என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.