கனடாவில் சீனாவின் காவல் நிலையங்கள் -அம்பலமான தகவல்களால் பரபரப்பு
உலகில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையில் சீனா, வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சில நாடுகளுக்கு வெளிப்படையான உதவிகளை வழங்கி அந்த நாடுகளை தனது வலைக்குள் விழுத்துவதும் ஏனைய நாடுகளில் தனது இரகசிய செயற்பாட்டை மிகவும் நுட்பமான முறையிலும் கனகச்சிதமாக செய்து வருகிறது.
கனடாவில் சீன காவல் நிலையங்கள்
அந்த வகையில் கனடாவில் சட்டவிரோதமான முறையில் சீன காவல் நிலையங்கள் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் இவ்வாறு இயங்கி வந்த இரண்டு காவல் நிலையங்கள் தொடர்பிலான தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
சீனா வெளிநாடுகளில் தனது காவல் சேவைகளை வழங்குவதற்காக இவ்வாறு சட்டவிரோதமான முறையில் காவல் நிலையங்களை பல நாடுகளில் நிறுவி செயற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன பிரஜைகளை இலக்கு வைத்து
53 நாடுகளில் சுமார் 12 காவல் நிலையங்களை சீனா செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகளில் இவ்வாறு காவல் நிலையங்களை அமைப்பதற்கு அந்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சீன பிரஜைகளை இலக்கு வைத்து இந்த காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த நாடுகளில் வைத்து அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வான்கூவார், மற்றுமொரு இடத்தில் இவ்வாறு சட்ட விரோதமான நிலையில் சீன காவல் நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
