சிறிலங்காவில் பூதாகரமாக வெடித்த விவகாரம்..! நாட்டைவிட்டு வெளியேறியது சீன கப்பல்
இரண்டாம் இணைப்பு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 கப்பல் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
2.43pm
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, இன்று (22) மாலை 4 மணிக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்ட இந்த ஆய்வுக் கப்பலானது, கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்பும் நோக்கத்தில் உத்தியோகபூர்வமாக நுழைந்தது.
19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து இந்த கப்பல் வெளியேறவுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு முன்னர் அறிவித்ததிருந்தது. இருபினும், இரண்டு நாட்களின் பின்னர் இன்று புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
யுவான் வாங் 5 கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. அத்துடன் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் படைத்தது.
குறித்த கப்பல் கடந்த 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இலங்கை வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் இந்தியா தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக சீன கப்பலின் விஜயம் காணப்படுகிறது என கவலை எழுப்பியமையால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேற்படி கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு அமைச்சு, சீனாவிடம் கோரிக்கை விடுத்தது.
எனினும், இந்தக் கோரிக்கைக்கான காரணத்தை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் தெரிவிக்கவில்லை.
ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் , மேற்படி கோரிக்கை விடுக்கப்படும் தருணத்தில் இலங்கையை அண்மித்ததாக இந்து சமுத்திரத்தில் இருந்தது. அதன்பிறகு வேகத்தைக் குறைத்து பயணித்திருந்த யுவான் வாங் 5 கப்பல், வெளிவிவகார அமைச்சின் மறு அனுமதி கிடைக்கும் வரை காத்திருந்தது.
அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் மகிந்த
எவ்வாறாயினும், சீனா மற்றும் இந்தியாவின் ஆழந்த கண்டனத்துக்கு மத்தியில், யுவான் வாங் 5 என்ற உயர் தொழில்நுட்ப சீன கண்காணிப்பு கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது.
இதற்கிடையியல், "யுவான் வாங் 5" நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றிந்தன.
சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான சாகல ரத்நாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதி காலை 7.30 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
அதன்போது, அந்த கப்பலுக்கு வைபவ ரீதியாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் அச்சத்திற்கு காரணம் என்ன
எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கு இந்திய அமெரிக்க மட்டங்களில் நிலவிய எதிர்பு காரணமாக இலங்கை அரசு நெருக்கடிகளை எதிர்கொண்டது.
அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட குறித்த கப்பல் மூலம் தென் இந்தியாவில் உள்ள 6 கடற்படை தளங்களை இந்த உளவு கப்பலால் படம் பிடிக்க முடியும் எனவும் அங்கு என்ன வசதிகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய 2 இடத்திலும் சக்திவாய்ந்த அணுமின் நிலையங்கள் உள்ளன.
இந்த அணுமின் நிலையங்களையும் உளவு கப்பலால் பார்க்க முடியும் எனவும் சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பணிகளையும் அந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்ட பின்னர் இந்தியா தமது கடற்பரப்பில் உலங்குவானுர்த்திகள் மூலம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது என இந்தியாவின் முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் தெரிவித்திருந்தார்.
இந்தியாவை கண்காணிக்கவே சீனாவின் உளவு கப்பல் இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாகவும் இந்த கப்பலை எதிர்கொள்ள இந்தியாவும் முழு தகுதியுடன் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
புதிய தலைவலியாக மாறிய கப்பல் விவகாரம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிறிலங்காவிற்கு இந்த கப்பல் பிரிச்சினையானது புதிய தலைவலியாக மாறியுள்ளது.
இந்தியாவா சீனாவா என்பதை தெரிவு செய்யவேண்டிய நிலை வரும்போது இலங்கை ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளும் இராஜதந்திர நெருக்கடியை இந்த கப்பல் சர்ச்சை பிரதிபலிக்கின்றது.
கப்பல்தொடர்பாக அழுத்தங்கள் கொடுத்ததாக தெரிவிக்கப்படுவதை இந்தியா மறுத்துள்ள அதேவேளை கப்பல் விஜயத்தினால் தனது பாதுகாப்பு பொருளாதார நலன்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது. இந்தியா இந்த விவகாரத்தை எவ்வாறு பார்க்கின்றது என்பது குறித்த மறைமுக கருத்தாக இது காணப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவி வழங்கிவரும் இந்தியா இலங்கைக்கு உதவி வழங்குவதில் முன்னணியில் உள்ளது. ஆனால் இந்த சமீபத்தைய சர்ச்சை அதனை பாதிக்க கூடும் என அரசியல் அவதானிகள் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.