கனடாவில் வடகிழக்கு மேம்பட்டுக்கான மூன்று நாள் மகாநாடு ஆரம்பம்
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி நோக்கில் ஆய்வு மாநாடு அனைத்துலகப் பேரவையின் ஏற்பாட்டில் ஒக்டோபர் 10ஆம் திகதி டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ கேம்பஸில் ஆரம்பமானது.
இந்த ஆய்வு மாநாட்டில் 75பேருக்கும் மேல் கலந்துகொள்ள விண்ணப்பித்திருந்த நிலையில் 53பேரின் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படவுள்ளன.
அறிவுசார்ந்த இந்த நிகழ்வு புலமைசார்ந்தவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இடம்பெறுகிறது. பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 15பேராசிரியர்களை உள்ளடக்கிய அணியே இதனை பரிசீலித்து ஆய்வுக்கட்டுரைகளைப் பரிந்துரைத்துள்ளது.
அரசியல் பிரதிநிதி
இந்த மாநாட்டிற்காக தாயகத்தில் இருந்தும் அரசியல் பிரதிநிதிகளும் பேராசிரியர்களும் கலந்துகொண்டுள்ளதுடன் புலம்பெயர் தேசத்தில் உள்ள அறிஞர்கள், ஆளுமைகளும் கலந்துகொண்டுள்ளனர்.
தேச விடுதலையை தமிழர்கள் அடைகின்ற வேளையில் பொருளாதார பலத்துடனும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பில் இந்த மாநாடு முன்னெடுக்கப்படுவதாக அதன் இடைக்காலத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
இதன்படி தமிழர் தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை வலுப்படுத்தவும் இந்த மாநாடு பெரிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிநாள் நிகழ்வு
ஒக்டோபர் 10 ஆரம்பித்துள்ள இம்மாநாடு ஒக்டோபர் 12 வரை இடம்பெறுகின்றது.
இறுதிநாள் இரவு நிகழ்வு அனைத்துலக தமிழர் பேரவையின் வருடாந்த ஒன்றுகூடலாகவும் இடம்பெறுகின்றது.
இந்த ஆய்வுப் பொருண்மைகளை எடுத்துரைக்கும் அதேவேளை கேள்வி பதில் உரையாடல்களும் பல்வேறு புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் விதைக்கும் வகையில் இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





