லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தட்டுபாடு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
நிலவி வரும் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் தட்டுபாட்டை குறைக்க மாற்று நடவடிக்கையொன்றை எடுக்க அரசாங்கம் பரிசீலித்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு லிட்ரோ (Litro) நிறுவனம் எரிவாயுவை நிரப்பி விநியோகிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் எதிர்கொள்ளும் கடுமையான அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறை
இந்தநிலையில் இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் அனைத்து துறை சார்ந்த பங்குதாரர்களையும் உள்ளடக்கிய தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

லிட்ரோ நிறுவனம் நாளாந்தம் 12.5 கிலோகிராம் எடையுள்ள 80,000 எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகித்து வருகிறது.
இந்தநிலையில் மாலைத்தீவிலிருந்து எரிவாயுவை ஏற்றி வரவிருந்த கப்பல் வருகையில் மூன்று நாட்கள் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் சுமார் 2,40,000 சிலிண்டர்களுக்கான தற்காலிகப் பற்றாக்குறை உருவானது.
சந்தை தேவை
இதனடிப்படையில் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்ததைத் தொடர்ந்து சந்தை தேவையைப் பூர்த்தி செய்ய லிட்ரோ நிறுவனம் தனது நாளாந்த விநியோகத்தை 1,00,000 சிலிண்டர்களாக உயர்த்தியுள்ளது.

20 வீதம் சந்தைப் பங்கைக் கொண்டுள்ள லாஃப்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக சந்தைக்குத் தேவையான போதுமான எரிவாயுவை விநியோகிக்கத் தவறியதே தற்போதைய நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் எனப் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), லாஃப்ஸ் நிறுவனத்திற்கு உடனடியாகச் சந்தை விநியோகத்தைச் சீரமைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் தவறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
லாஃப்ஸ் நிறுவனம்
லாஃப்ஸ் சிலிண்டர்களுக்கு லிட்ரோ நிறுவனத்தின் மூலம் எரிவாயுவை நிரப்பி விநியோகிப்பது தொடர்பில் கேட்கப்பட்ட போதிலும் லாஃப்ஸ் நிர்வாகம் இதுவரை எந்தவொரு தெளிவான பதிலையும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் நிறுவனம் இலங்கையில் தொழிலைத் தொடங்கிய போது தனது உற்பத்தியில் 80 வீதம் ஏற்றுமதி செய்யவும், 20 வீதம் மட்டுமே உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தது.

இருப்பினும், தற்போது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அதேவேளையில் ஏற்றுமதிப் பொறுப்புகளையும் அந்நிறுவனம் புறக்கணித்துள்ளது.
ஏற்றுமதி சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியாது எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், லாஃப்ஸ் நிறுவனம் தனது விநியோகத்தை முற்றாக நிறுத்தும் பட்சத்தில் சந்தையில் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய புதிய முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |