ரணிலுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு - அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
சிறிலங்கா அரசாங்கத்திற்கு தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும், அடுத்த கட்டப் பேச்சுக்கு முன்னர் முன்னேற்றம் கட்டாயம் தேவை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கடந்த 10ஆம் திகதி அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த 10 ஆம் திகதி அதிபர் செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இறுதியாக நடைபெற்ற பேச்சின் போது நில விடுவிப்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட உடனடி விடயங்களை நடைமுறைப்படுத்த அரசுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியிருந்தோம்.
ரணிலின் உத்தரவாதம்

அந்த விடயங்களில் இன்னமும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனினும், பொங்கல் தினமன்று யாழ்ப்பாணத்தில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிபர் நடத்திய சந்திப்பின் போது நில விடுவிப்பு தொடர்பில் சில உத்தரவாதங்களை வழங்கியுள்ளார்.
அதிபரின் இந்த உத்தரவாதங்களைப் படையினர் செயற்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிபரிடமிருந்து அடுத்த கட்டப் பேச்சுக்கான அழைப்பு இன்னமும் எமக்கு வரவில்லை.
அடுத்த கட்ட பேச்சில் முன்னேற்றம்

அழைப்பு வந்தால் தான் அந்தப் பேச்சில் நாம் பங்குபற்றுவதா? இல்லையா? என்பது தொடர்பில் முடிவு எடுப்போம்.
அடுத்த கட்டப் பேச்சுக்கு முன் அதிபரிடம் நாம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளில் கட்டாயம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.