மக்கள் விடுதலை முன்னணியின் ஏமாற்று வேலை! சாமர சம்பத் சாடல்
மக்கள் விடுதலை முன்னணி நுவரெலியாவில் நடத்தும் கூட்டத்திற்காகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பணம் வழங்கி, அவர்களை ஏமாற்றி அழைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
''பௌர்ணமி தின விடுமுறை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள மாற்றங்கள், மே தினக் கூட்டங்களைச் சீர்குலைப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம்.
போலித்தனமான அரசியல்
இவ்வாறான போலித்தனமான அரசியலுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள். மே தினத்தில் கொழும்பு, கேம்பல் மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்தும்.
இக்கூட்டத்தில் சுமார் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரையிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காகத் தாம் ஏற்கனவே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று மக்களைத் திரட்டியுள்ளோம்.
அரசாங்கம் எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் மக்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள் என்பதில் தமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
தமது கட்சியானது 1974ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஜனாதிபதிகளை உருவாக்கிய நீண்டகால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டது. மேலும், அரசாங்கத்தின் மிரட்டல்களுக்குத் தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |