திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் டொலர்! முக்கிய அதிகாரி உயிர்மாய்ப்பு
இலங்கை திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் நான்கு அதிகாரிகளில் ஒருவர் தவறான முடிவடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) உதவி பணிப்பாளராக செயற்பட்ட ஒருவரே இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் வைத்து இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில் குறித்த சம்பவம் குறித்து குளியாபிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம் சிக்கியமை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் நிதி அமைச்சின் நான்கு சிரேஸ்ட அதிகாரிகளை அரசாங்கம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த அதிகாரிகளில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு பணிப்பாளர் மற்றும் ஒரு உதவி பணிப்பாளர், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தைச் (PDMO) சேர்ந்த ஒரு பணிப்பாளர் மற்றும் ஒரு மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்குவர்.
முன்னதாக, குறித்த மோசடி தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அந்த அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகத் தவறிவிட்டார் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |