அநுர அரசின் பட்ஜெட் : இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுக்கப்போகும் முடிவு
இந்த வரவு செலவுத் திட்டத்திலும் நாங்கள் பல விடயங்களை ஆதரித்தாலும்கூட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற இந்த அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கான மொழி, பாதுகாப்பு நிலம் சம்பந்தப்பட்ட உறுதிப்பாடுகள் இல்லாத பட்சத்தில் அதற்கு எவ்வாறு ஆதரவளிக்கின்றது என்கின்றதொரு வினா எழும்புகின்றது. ஆகவே நாம் நிதானமாக வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை வாக்கெடுப்பு முன் எடுப்போம். இதிலுள்ள நல்ல விடயங்களை பாராட்டுவதோடு தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தொடர்ந்துகுரல் கொடுப்போம் என என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(11.11.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பில் சில செயற்றிட்டங்கள்
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் காணப்பட்டிருக்கின்றன. இந்த வேலைத் திட்டங்களை நாங்கள் நாடாளுமன்ற குழு கூட்டங்களில் முன்வைத்திருந்தோம் அதற்காக வேண்டி நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் விசேடமாக முந்தானை ஆறு திட்டத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது பாரியளவு வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும், மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வரப்பிரசாதமாகவும் இது அமையும், அதுபோல் கிரான் பாலம் பெண்டுகள்சேனை பாலம் போன்ற பாலங்களும் மிகப்பெரிய வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுத்துவதற்குரிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்த பாலங்கள் அமைப்பதற்காக வேண்டியும் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
மீன் பிடித்துறை முகத்தை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி 350 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்களோடு நாங்கள் விட்டு விட முடியாது. கல்வித்துறையை பொறுத்தளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய ஆளணிப் பற்றாக் குறைகள் காணப்படுகின்றன. இதற்குரிய திட்ட முன்மொழிவுகளை நாங்கள் முன்மொழிந்திருக்கின்றோம். ஆனாலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான தீர்வு காண்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளைக் காணவில்லை. ஆளணியை நாடு பூராவும் பூர்த்தி செய்வதற்குரிய முன்மொழிவுகள் சொல்லப்பட்டிருந்தாலும்கூட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்பது தெரியாது.
கைத்தொழித்துறை, சுற்றுலாத்துறை, போன்றனவற்றினூடாகவும், வடகிழக்கில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டு செல்லப்படும் என்பதற்கான உறுதிப்பாடுகளும் பெரியளவில் தெரியாதுள்ளது. இவ்வாறு கடந்த காலங்களிலும் சொல்லப்பட்டிருந்தும் பல விடயங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கின்றன.
எனவே இந்த அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒரு கவர்ச்சிகரமாக மக்களுக்கான திட்டங்களை உள்வாங்கி இருக்கின்றது. வரி குறைப்பு, வரியை நிலைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்கள், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, கடனைமீளச் செலுத்துகின்ற விடயம், இருப்பை பேணுதல், போன்ற பல விடயங்களை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டிருக்கின்றன. ஆனாலும் மிகப் பிரதானமாக உற்பத்தி துறையை பெருக்குவதற்கு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரியளவு கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.
வடகிழக்கு மக்கள்
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் எதிர்பார்ப்பது வடகிழக்கு மக்கள் கடந்த யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள். யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கழிந்தும், பாரியளவு கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. நாட்டின் மொத்த வளர்ச்சியில் பெரிய அளவில் கொண்டு வருவதற்குரிய செயற்றிட்டம் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களால் இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை

அரசாங்கம் வடகிழக்கில் வினைத்திறனான கட்டுமான பணிகளையும், அபிவிருத்தி திட்டங்களையும், முன்னெடுப்பதற்கும் இன்னும் பாரியளவு ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். என்பதுதான் எமது அபிப்பிராயம். கிழக்கு மாகாணத்திலே கடல் வளம் மிகவும் பலமாக இருக்கிறது. ஆனாலும் ஒரே ஒரு மீன்பிடித் துறைமுகம்தான் இருக்கிறது. கடந்த காலங்களில் அதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக வாழைச்சேனையில் அமைந்திருக்கின்ற துறைமுகத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்வதன் ஊடாக முற்றுமுழுதான தேவையை நிவர்த்தி செய்யமுடியாது. பதிவு செய்யப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட படகுகள் இருக்கின்றன. மீன்வளத் துறையைகூட பூர்த்தி செய்வதற்கான முற்றுமுழுதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
யுத்த காலத்தில் கூட நாட்டின் ஏனைய பகுதிகளில் மீன் துறை அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன அதற்கு பின்னரான காலப்பகுதியில் கூட வடகிழக்கில் சம அளவில் செய்யப்பட்டு இருக்கவில்லை. அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவில் வடகிழக்கில் நிதி ஒதுக்கீடுகளும் அமைந்திருக்கவில்லை. குறிப்பாக மட்டக்களப்புக்கு மீன்பிடித்துறையை வளப்படுத்துவதற்குரிய பெரிய அளவிலான திட்ட வரவுகள். முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மீன்பிடித்துறை நம்பி இருக்கின்றார்கள்.
யுத்த காலத்துக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான கிராமிய குளங்கள் இருந்தன. தற்போது வன இலாகா, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றன அவற்றுள் தலையீடு செய்து தற்போது குளங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மாவட்டத்தில் நீர்; வளத்தை முறையாக பேணுவதற்குரிய செயற்றிட்டங்கள் சொல்லப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தரப்பட்ட நல்ல விடயங்களை பாராட்டுவதோடு பாரியளவு திருப்தி அடையக்கூடிய அளவில் இந்த வரவு செலவு திட்டம் வடகிழக்கில் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றது என சொல்லிவிட முடியாது.
இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத்திட்டங்கள்
வடகிழக்கில் இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கின்றது. யுத்த காலத்தில் வீடுகளையும், காணிகளையும் இழந்த மக்களுக்கு அவற்றை மீள உறுதிப்படுத்திக் கொடுப்பதற்கு புதிய செயற்றிட்டத்தினை மேற்கொள்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பததைக் காணவில்லை. வீட்டு திட்டங்கள் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டு திட்டங்கள் அரைகுறையாக காணப்படுகின்ற திட்டங்களுக்கு இன்னும் மேலதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

வட கிழக்கு மக்கள் யுத்தத்தில் அவர்களின் உடைமைகளை இழந்து போய் இன்னும் மீள எழ முடியாத நிலையில் இருக்கின்ற இந்த நிலையில் பாரிய அளவிலான வீட்டுத் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
மாகாண சபை தேர்தல்
தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான அரசியல் தீர்வு தேவை இருக்கின்றது. முதற்கட்டமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குகூட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் எப்போது தேர்தல் நடைபெறும் அதற்கான உறுதிப்பாடான திகதியும் வழங்கப்படவில்லை. எல்லை மீள் நிர்ணயம் என்பதன் ஊடாக காலத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான விடயங்கள் அங்கு கொண்டு செல்லப்படுமா அல்லது தமிழ் மக்கள் ஆகக் குறைந்ததொரு தீர்வு திட்டத்தை மாகாண சபை ஊடாக இருக்கின்ற அந்த விடயத்தை கூட கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுமா என்பதுகூட பலமான சந்தேகங்கள் இருக்கின்றன.

மிக முக்கியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை வைத்திருக்கின்ற இந்த அரசாங்கம் சட்ட திருத்தத்தை மிக இலகுவாக பல்வேறு விடயங்களில் நாட்டுக்கு தேவைப்படுகின்ற சட்டங்களை மிக விரைவாக கொண்டு வருகின்ற அந்த அரசாங்கம் ஏன் தமிழ் மக்களுக்கான இந்த ஒரு தீர்வுத்திட்டத்தை கொண்டு வருவதற்காக முன்முயற்சியாக மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அதற்குரிய பொறிமுறையை அவர்களால் செய்ய முடியும் என்ற உறுதிப்பாட்டை இந்த ஜனாதிபதி சொல்லி இருக்கவில்லை.
அரசியல் கைதிகள் விடுதலை
ஆகவே இவ்வாறான விடயங்கள் பாரியளவு சந்தேகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் கழிந்து இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு அடிப்படையான செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறிப்பாக அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட அரசியல் கைதிகள் சம்பந்தமான விடுதலை, இன்றும் மறந்து போய் அமைச்சர்கள் அவ்வாறான ஒரு அரசியல் கைதிகளின் விடயங்கள் இல்லை என்று கூறுகின்றார்கள். தேர்தலுக்கு முன்னரான உறுதிமொழி தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மீறப்படுகின்றனவா அல்லது தட்டிக் கழிக்கப்படுகின்றனவா என்ற நிலைப்பாடு இருக்கின்றது. அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கான கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை தமிழ் தேசிய கட்சிகள் கூறி நிற்கின்றன.

விடயத்தில் இந்த விடயம் தட்டி கழிக்கப்படுகின்றன மாறாக சர்வதேச பொறிமுறை வேண்டாம் உள்நாட்டுமுறை மூலம் நீதியை பெற்று தருவோம் என்றால் அந்த விடயங்களைகூட யார் முன்னெடுக்கின்றார்கள் அரசியல் கட்சிகளா அல்லது கடந்த காலங்களிலே யுத்த முனைகளிலேயே ஈடுபட்ட படையினரா இவ்வாறான பொறுப்புக்களை செய்யப் போகின்றார்கள் என்பன மிக நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.
எனவே அரசியல் தீர்வு விடயத்துக்கான எந்த ஒரு நிலைமைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலையில் கவனம் செலுத்தப்படவில்லை. நீதி பொறிமுறை சம்பந்தமான உத்தரவாதம் இல்லை, மாகாண சபை தேர்தல் நடத்துவது சம்பந்தமான ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லை இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு மிகப் பிரதானமாக ஏன் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கட்சிகளை ஆதரித்தார்கள் என்ற நோக்கத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தங்களுடைய உரிமைகள் தங்களுடைய சுயாட்சிகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் வாக்களித்திருந்தார்கள் அந்த விடயங்கள் தட்டிக் கழிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் இருக்கின்றன. ஆகவே அரசு இந்த வரவு செலவுத் திட்டத்தில் சில விடயங்களில் நல்ல விடயங்களை நாட்டுக்கு செய்திருக்கின்றார்கள், அதற்கு அப்பால் அவர்களுடைய ஊழல் ஒழிப்புக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. மிக நெருக்கடியாக இருந்த நாட்டை ஊழல் மிகப் பிரதான பங்கு வகிக்கின்றது பொருளாதார நெருக்கடிக்கு ஊழல் மிகப் பிரதான பங்கு வைத்திருந்தது.
பொருளாதார நெருக்கடி தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் அல்லாத பட்சத்தில் தற்காலிக தீர்வாக இருக்கும் போதைப்பொருள் பாதாள உலக குழுக்களுக்கும் எதிரான நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை நாம் வழங்கி நாட்டிலிருந்து உள்ள எமது இளம் சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கின்றது.
அதற்கு இன மத பேதம் இன்றி நாம் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இந்த வரவு செலவுத் திட்டத்திலும் நாங்கள் பல விடயங்களை ஆதரித்தாலும்கூட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற இந்த அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கான மொழி பாதுகாப்பு நிலம் சம்பந்தப்பட்ட உறுதிப்பாடுகள் இல்லாத பட்சத்தில் அதற்கு எவ்வாறு ஆதரவளிக்கின்றது என்கின்றதொரு வினா எழும்புகின்றது. ஆகவே நாம் நிதானமாக வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை வாக்கெடுப்பு முன் எடுப்போம். இதிலுள்ள நல்ல விடயங்களை பாராட்டுவதோடு தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தொடர்ந்துகுரல் கொடுப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |