கச்சதீவு யாருக்கு..? : வரலாற்றின் பின்புலங்களில் இருந்து ஒரு பார்வை
‘கச்சத்தீவு’எனும் பெயரைக் கேட்டாலே உங்களுக்கு நினைவுக்கு வருவது, ‘இந்தத் தீவு யாருக்கு சொந்தம்’என்பதுதான். இந்த கச்சத்தீவின் வரலாறு என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
கச்சத்தீவு (Katchatheevu) யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது.
1974-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது.
கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக காணப்படுகிறது.
வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி கச்சத்தீவு எப்போதுமே இலங்கையின் ஒரு பகுதியாக இல்லை.அப்படி இருக்கையில் 1974 ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
1976 ம் ஆண்டு மற்றொரு ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டது.
முதல் ஒப்பந்தம் கையெழுத்தான போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான். அப்போது, 1974வது ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி தமிழ்நாட்டின் கருத்தை கேட்டுப்பெறாமல், நாடாளுமன்றத்திலும் முன்னறிவிப்பு தராமல் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி கையெழுத்திட்டிருந்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதம் பாலம் முதல், பாக் ஜலசந்தி வரையிலான கடல் பரப்பில் இந்தியா மற்றும் இலங்கை இடையே கற்பனையான எல்லைக்கோடு வரையப்பட்டது. இந்த கோட்டினால் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெறக் கோரி அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி கடிதம் எழுதினார்.
தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்த நகல் நாடாளுமன்றத்தில் தாக்கலான போது, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க 1976ம் ஆண்டு மற்றொரு உடன்படிக்கை இலங்கையுடன் கையெழுத்தான போது, கச்சத்தீவு மீது தமிழ்நாடு மீனவர்களுக்கு இருந்த உரிமையும் மறுக்கப்பட்டது.
இந்த சமயத்தில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது.
அப்போது கருணாநிதியின் முழக்கமான "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என்ற வாக்கியம் மிகவும் புகழ் பெற்றது. கச்சத்தீவு தாரைவார்ப்பின் போது திமுக எதிர்ப்பு தெரிவித்தாலும், இதற்கு பிந்ததைய நிலைப்பாடு திமுக மீதும், கருணாநிதி மீதும் விமர்சனத்திற்கு காரணமாகியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
