போதைப்பொருள் கடத்தல்கார்களுடன் நெருங்கிய உறவு! நாமலை கடுமையாக விமர்சித்த ஆளும் தரப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நாமல் ராஜபக்ச இடையே இன்று கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் போதைப்பொருட்கள் காணப்படுவதாக, போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.
அண்மையில் தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பில் அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் நாமல் ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.
புலனாய்வு தகவல்கள்
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, ”புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் கூட தற்போதைய அரசாங்கம் கொள்கலன் விடயத்தில் அசமந்த போக்குடன் செயற்பட்டுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தாமல் வெளியிடப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை எங்கள் மீது முன்வைக்கும் போது உண்மையிலேயே குற்றமிழைத்தவர்களுக்கு அது ஒரு சாதகமாக அமையும். எங்களுடன் உள்ள சிக்கல்களை தனியாக தீர்த்துக் கொள்ளுங்கள்.
முதலில் போதைப்பொருள் வலையமைப்பின் பின்னால் இருப்பவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
பின்னணியில் மொட்டுக்கட்சி
நாமல் ராஜபக்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ”நாட்டில் கண்டுபிடிக்கப்படும் போதைப்பொருட்களின் பின்னால் மொட்டுக் கட்சியே உள்ளது.
தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களை நாட்டுக்கு கொண்டுவர ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் தொடர்பாளருமான சம்பத் மனம்பேரியை தற்போது தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.
விசாரணைகளின் முடிவில் குற்றமிழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள். நாங்கள் போதைப்பொருள் வலையமைப்புகளை, பாதாள உலகக் குழுக்களை கட்டியணைத்துக் கொண்டிருக்கவில்லை. சட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
