ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் சந்தேகநபர்களான இரு புலனாய்வு அதிகாரிகள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு காவல்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு புலனாய்வு அதிகாரிகளையும் ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
வவுணதீவு இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்தவரும் முதல் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டவருமான யாசிம் பாவா ஜெகில்பாஸ் மற்றும் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட சரத் சமந்தா ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
'சூம்' தொழில்நுட்பம் ஊடாக முன்னிலை
சந்தேகநபர்கள் இருவரும் சிறைக்காவலில் இருந்தவாறே 'சூம்' (Zoom) தொழில்நுட்பம் ஊடாக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இச்சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்தது.
2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய நிகழ்வுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சான்றுகள் பகுப்பாய்வு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாகப் பெறப்பட்ட சில முக்கிய தகவல்கள் மற்றும் அவற்றை உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த செயல்முறை ஆகியவை குறித்து இந்தச் சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் சான்றுகள் தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபர்கள் இருவருக்கும் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையையும் அதே திகதிக்கு (ஒக்டோபர் 21) ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |