ஏ9 வீதியில் காட்டு யானை அட்டகாசம்! ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (22) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியின் பழைய முறிகண்டி பகுதியில் 236 ஆறாவது கிலோமீற்றருக்கும் 237 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவரை வீதியால் சென்றவர்களால் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் திருமுருகண்டி பகுதியைச் சேர்ந்த 37 அகவையுடைய பிரான்சிஸ் சத்தியதரன் எனும் குடும்பஸ்தர் ஆவார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையை காட்டுக்குள் விரட்டி விடுகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
