ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவிற்கு வழங்கிய நிதி!
ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு 48 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து வெளியாகும் இரசாயன கழிவுகளை அகற்றும் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. சிறிய அளவிலான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் குடும்பங்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவியை வழங்கவுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட மீன்பிடி தடையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் கப்பலிலிருந்து வெளியேறும் இரசாயன பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கும் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. கடற்கரை பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு பயிற்சி, மற்றும் உபகரணங்களும் குறித்த நிதி ஊடாக வழங்கப்படவுள்ளது.
கப்பல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கான நிதியனுசரணைகளை வழங்குபோது பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையோர் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.