பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில் உள்ள ஒரு சொத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
மாத்தறை, எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட சொத்து ஒன்றை வாங்கியது தொடர்பான வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையானது அந்த வழக்கோடு தொடர்புடையதாகும்.
பசிலுக்கு எதிராக FCID வழக்கு தாக்கல்
தென்னந் தோட்டம் என்று கூறப்படும் இந்தச் சொத்தை வாங்கியது தொடர்பாக பசிலுக்கு எதிராக FCID இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

வழக்கு தொடர்பான தகவல்களின்படி, இச்சொத்து முன்னர் ஹெர்பேட் கெல்லர் (Herbert Keller) என்ற ஜெர்மனியப் பிரஜைக்குச் சொந்தமாக இருந்தது; முன்னாள் அமைச்சர் இதனை 60 மில்லியன் ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.
பசிலின் பிணைத் தொகையைப் பறிமுதல் செய்ய உத்தரவு
இவ்வழக்கின் முந்தைய கட்ட நடவடிக்கையாக, பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, பசிலின் பிணைத் தொகையைப் பறிமுதல் செய்யவும், அவரது பிணையாளர்களிடமிருந்து பிணைத் தொகையை அறவிடவும் மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |