யாழில் இருந்து மீண்டும் நாடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்!(புதிய இணைப்பு)
புதிய இணைப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (03) இந்தியாவிற்குப் பயணமானார்.
இரண்டாம் இணைப்பு
நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான விஸ்வ பிரசன்னா குருக்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பராட்டினார்.
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் பிரசன்னா குருக்கள் உலகளவில் தற்போது ஹீரோ என்றார்.
ஆலய மஹோற்சவத்தின் போது கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பராட்டினார். நல்லூர் கந்தசுவாமி கோயில் 25 நாள் மஹோற்சவத்தின் போது நடைபெறும் ஒருமுகத் திருவிழாவில் விஸ்வ பிரசன்னா குருக்களின் கணீர் குரலில் கட்டியம் சொல்லப்படும்.
அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தடைந்துள்ளார்.
இவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சார்ள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
உத்தியோகபூர்வ விஜயம்
இவருடன், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழுவும் வருகை தந்துள்ளது.
நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்திய அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் கிளை
இதன்போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இவர், யாழ்ப்பாண கலாச்சார மையத்தை பார்வையிட்டார்.
மேலும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் செல்லவுள்ளதுடன் யாழ் பொது நூலகத்தினையும் பார்வையிடவுள்ளார்.
அதுமாத்திரமல்லாமல் பாரத ஸ்டேட் வங்கியின் யாழ்ப்பாணக் கிளையையும் (SBI) அவர் திறந்து வைக்கவுள்ளார்.