லயன் குடியிருப்பில் திடீரெனப் பரவிய தீ : 3 வீடுகள் சேதம்
லிந்துலை காவல் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 10 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 3 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (04) அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த தீ விபத்தின் காரணமாக 03 குடும்பங்களை சேர்ந்த 08 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மூன்று மணி நேரத்தின் பின்
"அதிகாலை வேளையில் தீ பரவியதையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் ஓடிவந்துள்ளனர், அதற்குள்ளாக தீ வேகமாக பரவியுள்ளது.
பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள்,அனைவரும் இணைந்து சுமார் மூன்று மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயினால் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணை
மேலும் இந்தத் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க தோட்ட நிர்வாகம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |