இஸ்ரேலுக்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்திய நிறுவனம்!
இஸ்ரேலுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஃபிளைதுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
துபாயிலிருந்து இஸ்ரேலின் தெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபாய் (Flydubai Flight FZ1073) விமானத்தின் காக்பிட்டில் (Cockpit) விமானி ஒருவரால் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர் விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான அடிகள்
விமானம் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான அடிகள் கீழே இறங்கிய நிலையில் விமானப் பணிக்குழுவினரும் பயணிகளும் இணைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, விமானம் சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
காயமடைந்த விமானத்தின் கேப்டன் இந்தியாவைச் சேர்ந்தவர் (மும்பை) என்பது தெரியவந்துள்ளது.
துணிச்சலான நடவடிக்கை
அவரது துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், தாக்குதல் நடத்தியவருக்கு வேறு யாரேனும் உதவியாளர்களோ அல்லது ஈரானின் பின்னணியோ உள்ளதா என்பது பற்றி இப்போதே உறுதியாகக் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு புலனாய்வு விசாரணைகள் நிறைவடையும் வரை இஸ்ரேலுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஃபிளைதுபாய் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |