இலங்கை மக்களுக்கு அரசாங்கம் நகைச்சுவையை வழங்கிக் கொண்டிருக்கிறது! நாடாளுமன்ற உறுப்பினர் சாடல்
பெட்ரோலிய துறைக்கு பொறுப்பான அமைச்சரால் எரிபொருள் விலைகளை தீர்மானிக்க முடியாது என முன்னாள் எரிசக்தி அமைச்சரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
எரிபொருள் விலைகளை தீர்மானிப்பது நிதியமைச்சு. விலைகளை தீர்மானிக்க வேண்டுமாயின் எரிசக்தி அமைச்சரிடம் கருத்து கேட்க முடியும்.
எனினும் விலைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் நிதியமைச்சே எடுக்கும். சட்டத்திற்கு அமைய நிதியமைச்சருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் நபர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி, எதனையும் அறியாது கருத்துக்களை வெளியிட்டு வருவதன் காரணமாக அரசாங்கம் என்ற வகையில் தற்போது நாட்டுக்கு நகைச்சுவையை வழங்கி வருவதாகவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.