அரச வங்கிக்கு அருகில் இடம்பெற்ற பாரிய தங்க நகை கொள்ளை
கடவத்தை அரச வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்கென கொண்டுசென்ற 4.4 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண்ணொருவர் பேருந்தில் இருந்து இறங்கி வங்கிக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த ஒருவர் திடீரென பெண்ணின் வாயை ஒரு கையால் கத்த முடியாத வகையில் பொத்தி,தங்க நகைகள் அடங்கிய கைப்பையை திருடிச் சென்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பெட்டியில் வைக்க கொண்டு சென்றவேளை
வீட்டில் இருந்த தங்க நகைகளை குறித்த பெண் கடவத்தை பகுதியில் உள்ள வங்கி பாதுகாப்பு பெட்டியில் வைப்பதற்காக கொண்டு சென்றுள்ளார்.
கடந்த டிசம்பர் 19ம் திகதி, தனது உறவினர் திருமணத்திற்கு அணிவதற்காக லொக்கரில் இருந்த தங்க நகைகளை எடுத்துள்ளார். திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர், அந்த பெண் தனது கைப்பையில் தங்கத்தை வைத்து வங்கியில் உள்ள பெட்டகத்தில் வைப்பதற்காக எடுத்துச் சென்றதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
பையில் இருந்த 6 தங்க வளையல்கள், ஒரு தங்க கவசம், இரண்டு தங்க நெக்லஸ்கள், நான்கு தங்க மோதிரங்கள் மற்றும் இரண்டு ஜோடி தங்க காதணிகள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.