மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை : கஞ்சன உறுதி
இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய கலத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போது இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்கட்டணக் குறைப்பு
இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்திற்கமைய வீட்டுப்பாவனை உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான கட்டணம் 23.4 சதவீதத்தினாலும், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும், பொது சேவைகளுக்கான கட்டணம் 22.3 சதவீதத்தினாலும், மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 32.6 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவற்றுக்கான கட்டண அதிகரிப்பு 12 - 18 சதவீதமாகவே காணப்பட்டது. எனவே அதிகரிக்கப்பட்டதை விட அதிகமாகவே கட்டணக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது ஓமல்பே சோபித தேரர் போன்றோர் கட்டணத்தை செலுத்தாமல் இருக்குமாறு கூறியதோடு, தாம் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் பொது மக்கள் அவ்வாறு கட்டணம் செலுத்துவதை புறக்கணிக்கவில்லை. அதற்கு நன்றி கூறுகின்றோம்.
இந்தியாவின் கடன் திட்டம்
எரிபொருள், நிலக்கரி, நீர் மின் உற்பத்திகளுக்கு அப்பால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மின் உற்பத்தியிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், காவல்துறை, இராணுவ முகாம்கள் என்பவற்றில் சூரிய கலத்தின் ஊடாக 9000 மெகாவோல்ட் மின் உற்பத்தி திட்டத்தை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று சூரிய மற்றும் காற்றாலை ஊடான 10 மின் உற்பத்தி திட்டங்களுக்கான விலைமனுக்கள் எதிர்வரும் மாதங்களில் கோரப்படவுள்ளதுடன் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான விலைமனு கோரல் அறிவிப்புக்கள் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளதைப் போன்று மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
அதானி நிறுவனத்துடன்
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் காலத்திலேயே எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை ஊடகங்களில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நாம் தயார்.
அதேபோன்று 50 ரூபாவிற்கு ஒரு மின் அலகினைக் கொள்வனவு செய்வதற்கு அதானி நிறுவனத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் உண்மைக்கு புறம்பானதாகும். அவ்வாறு எந்தவொரு யோசனையும் இருதரப்பிலும் முன்வைக்கப்படவில்லை.
மாறாக 30 - 31 ரூபாவுக்கு மின் அலகொன்றை கொள்வனவு செய்வதற்கான யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரையில் இணக்கம் தெரிவிக்கவில்லை“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |