ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் உட்பட இருவர் சுட்டுக்கொலை
காசா பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஹமாஸின் பொருளாதார அமைச்சரும் ஹமாஸின் அரசியல் குழுவின் மற்றொரு மூத்த உறுப்பினரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
ஜவாத் அபு ஷமாலா என்பவரே இஸ்ரேல் படையினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டவராவார்.
ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டியவர்
ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த இவர் காசா பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டியவர் என இஸ்ரேல் இராணுவம் கூறியதாக டைம்ஸ் ஒப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, ஜகாரியா அபு மொயம்மர், ஹமாஸ் அமைப்பின் உள் உறவுகளின் தலைவர் என்று இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
"அவர் ஒரு மூத்த ஹமாஸ் அமைப்பின் முடிவெடுப்பவர் மற்றும் காசா பகுதியில் அமைப்பின் குழுக்களுக்கிடையே ஒருங்கிணைப்பாளராக இருந்தார்."
உறுதிப்படுத்தியது ஹமாஸ்
அவர் ஹமாஸின் காஸா தலைவர் யஹ்யா சின்வாருக்கு நம்பிக்கைக்குரியவராகவும், அமைப்பின் "சிரேஷ்ட தலைவர்களில் ஒருவராகவும், இஸ்ரேல் அரசுக்கு எதிரான பல தாக்குதல்களை திட்டமிடுவதிலும் ஈடுபட்டவர்" என்று இஸ்ரேல் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலில் மேற்படி இருவரும் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.