நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹாலி எல, எல்ல, பதுளை மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள், குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவலை மற்றும் ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு முன் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, மெனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் பிபிலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
