கடற்றொழிலாளர் விவகாரத்தில் ஏட்டளவில் நின்றுவிடகூடாது! இந்தியாவில் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு
கடல்சார் பாதுகாப்பு, மீன்வள மேலாண்மை மற்றும் பேரிடர் மீள்திறன் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புகள், வெறும் ஏட்டளவில் நின்றுவிடாமல் இப்பகுதி மக்களுக்கு நேரடியான மற்றும் உறுதியான பலன்களை வழங்க வேண்டும் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பின் 25-வது கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர் கடற்றொழிலாளர்கள், துறைமுக ஊழியர்கள் மற்றும் கடற்கரை சமூகத்தினர் குறித்தும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நவம்பர் 27 அன்று புது டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கையின் சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான தூதுக்குழு கலந்துகொண்டது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம்
2023 முதல் 2025 வரை IORA அமைப்பின் தலைமையாக பணியாற்றிய இலங்கை, இம்முறை முன்னாள் தலைமை என்ற தகுதியில், தற்போதைய தலைவரான இந்தியா மற்றும் துணைத் தலைவரான மொரிஷியஸ் ஆகியவற்றுடன் இணைந்து IORA டிரோய்கா எனப்படும் மூன்று பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவின் முக்கிய உறுப்பினராகப் பங்கேற்றது.

இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கொள்கை வகுப்பில் இலங்கை தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், IORA தலைமைத்துவம் என்பது உறுப்பு நாடுகளின் சார்பாக வகிக்கப்படும் ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, உறுப்பு நாடுகளின் அமைச்சர்களுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |