ஈபிள் கோபுரத்துக்கு வருகைதந்த இந்து மத அமைப்பு! பெண் ஊழியர் அனுமதி மறுப்பு தொடர்பில் நீளும் சர்ச்சை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பிரபல ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பெண் ஊழியர்கள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி, இந்து மத அமைப்பான Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) அமைப்பின் பிரதிநிதிகள் ஈபிள் கோபுரத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த குழுவினருடன் பெண் ஊழியர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடாது என நிர்வாகத்தால் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்
இந்த அறிவுறுத்தலுக்கு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிர்வாகத்தின் உத்தரவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறி வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் SETE நிறுவனம் மேற்கொண்ட சுயாதீன விசாரணையில், பல்வேறு நிர்வாக மற்றும் செயல்பாட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே குறித்த தினத்தில் பெண் ஊழியர்கள் அந்த விஜயத்திலிருந்து விலக்கப்பட்டதாக SETE தெரிவித்துள்ளது. இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
SETE நிறுவனத்தின் தலைவர் Ariel Weil, பணியிடத்தில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி திட்டங்களை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், SETE நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Patrick Branco Ruivo, இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |