கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு (Sri Lanka Police Media) தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 114 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 141 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 100 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சுற்றிவளைப்பு
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 204 கிராம் 696 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 162 கிராம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 06 கிலோ 933 கிராம் 474 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 31454 கஞ்சா செடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலும் காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
01. கொலை சம்பவம் - ரிதிமாலியத்த காவல்துறை பிரிவு.
ரிதிமாலியத்த காவல்துறை பிரிவின் இஹிரிய பகுதியில் வைத்து நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (11.05.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, பெத்தியகொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காதல் விவகாரம் ஒன்றே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
02. கொலை சம்பவம் - லிதுல காவல்துறை பிரிவு
லிதுலை காவல் பிரிவின் கும்வுட் பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதல் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தலவாக்கலை, கும்வுட் தோட்டத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில், இறந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மண்வெட்டியால் தாக்கி சகோதரரை கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லிதுல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
