ரணில் விக்ரமசிங்கவை நான் எதிர்க்கவில்லை : சாகர காரியவசம் பகிரங்க அறிவிப்பு
சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் தவறான முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் குறித்து தாம் தவறாக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றங்களின் போது, தமது கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கைத்தொழில் அமைச்சு வழங்கப்படவில்லை என்பதை மாத்திரம் தாம் சுட்டிக்காட்டியதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தாம் ஒருபோதும் கோரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேற்கொண்ட மாற்றம் தொடர்பில் தாம் அதிருப்தியோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தாம் வெளியிட்ட கருத்தை தவறான முறையில் செய்தியாக்கியுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.