இன்னும் 2 வாரங்களில் மாறப்போகும் சிறிலங்காவின் தலையெழுத்து
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்கு அங்கீகாரத்தை பெறுவது தொடர்பான மிகவும் சாதகமான செய்தியை பெறும் விளிம்பில் இலங்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், அமெரிக்க திறைசேரி செயலாளரும் இலங்கைக்கான கடன் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார மீட்பிற்கான கடனுதவியை பெறுவதற்கு வழியேற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனாவின் ஆதரவையும் சிறிலங்கா அரசாங்கம் வெற்றிகொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி
சீனாவின் உத்தரவாதங்கள், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு இருந்த மிகப் பெரிய தடையை நீக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் உள்ளதாக இது தொடர்பில் நன்கு அறிந்தவர்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் பரிஸ் கிளப் ஏற்கனவே தேவையான உத்தரவாதங்களை வழங்கியுள்ள நிலையில், இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார சீர்திருத்தம்
குறிப்பாக கடன் வழங்குநர்கள் வழங்கிய உத்தரவாதத்திற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் 15 நிபந்தனைகளையும் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனெட் யெலனுடனும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் வலுவான மற்றும் நிலையான மீட்சியை அடைவதற்குமான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜெனெட் யெலன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அனைத்து இருதரப்பு உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கான இலங்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டளவில் சமமான கடன் செலுத்தல் செயன்முறையையும் அவர் வரவேற்றுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்