சீனாவின் உள்நுழைவு! ஸ்ரீலங்காவை நோட்டமிடும் இந்தியாவின் ஆளில்லா விமானங்கள் - அமைச்சர் வழங்கிய பதில்
நாட்டின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா வெளியிட்டுள்ள இந்த பிரசாரம் குறித்து ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்திய கடற்படையின் உப பிரதானி அசோக் குமார் தெரிவித்தார்.
சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமது நாட்டின் பாதுகாப்பு கருதி ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நேற்று கருத்துரைத்திருந்தார்.
அதன்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் இந்த விடயம் தொடர்பான ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.