உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் பின்தங்கிய இந்தியா
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் இந்தியா பின் தங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) நடப்பு ஏப்ரலில் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் 30 டிரில்லியன் டொலருக்கும் மேல் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன் 9-20 டிரில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
5 டிரில்லியன் டொலருடன் மூன்றாம் இடத்தில் ஜேர்மனி உள்ளதுடன் 4 - 4.5 டிரில்லியன் டொலருடன் ஜப்பான், இங்கிலாந்து நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ள நிலையில் 4 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இந்தியா 6 ஆம் இடத்தில் உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
முன்னதாக 2021 முதல் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இருந்து வந்தது. ஆனால் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் 6வது இடத்தில் இருந்து இங்கிலாந்து இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்துக்கு வந்துள்ளது.

இந்த உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசை அமெரிக்க டொலரின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது. இதில் இந்தியா பின் தங்குவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு டொலருக்கு நிகராக 80இல் இருந்து 90க்கும் மேலாக சரிந்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுமே 4 - 5 டிரில்லியன் டொலர் என்ற நெருக்கமான எல்லைக்குள் இருப்பதால், நாணய மதிப்பில் ஏற்படும் சிறு மாற்றமும் தரவரிசையைப் பாதிக்கிறது.
கச்சா எண்ணெய்
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 வீத இறக்குமதி செய்கிறது. போர்ச் சூழலால் எண்ணெய் விலை உயரும்போது, இந்தியா அதிக டொலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. இது ரூபாயின் மதிப்பை நேரடியாகப் பாதிக்கிறது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து நிதியைத் திரும்பப் பெற்று, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டொலருக்கு மாறுகின்றனர்.
அமெரிக்காவில் நிலவும் அதிக வட்டி விகிதங்கள் டொலரை மற்ற நாடுகளின் நாணயங்களை விட வலிமையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |