அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்ய முழு ஆதரவு!
நாட்டின் சட்டதிட்டங்களை மீறி தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவு வழங்குவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று (12.10.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் மனித நேயத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் இறையாண்மை
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் 47 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த கைதுக்கு எதிராக இந்தியாவில் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
இன்று மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழிலாளர்களின் பெறுமதியான மீன்பிடி வலைகளை நாசம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை இருக்கிறது. குறித்த இறையான்மையை யார் மீறுகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இன்று வரை எமது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் இந்திய எல்லைக்குள் வைத்தே அவர்கள் இலங்கை கடற்படை கைது செய்வதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
நாங்களும் இந்த கடலை நம்பி இருக்கிறோம்.எங்களையும் வாழ விடுங்கள். கோடிக்கணக்கான பெறுமதியான கடல் வழங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.
இலங்கை கடற்பரப்பில் நுழைந்தால் உங்களை கைது செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை. அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சருக்கும் , இலங்கை கடற்படைக்கும் நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
