சர்வதேச மேடையில் தமிழர் கலை - பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்த சித்ரகலைமன்றம்
பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவெண்ட்ரியில் நடைபெற்ற பிரம்மாண்ட விருது வழங்கும் விழாவில் சித்ரகலைமன்றம் தனது பிரிவில் சிறந்த வெற்றியைப் பதிவு செய்து சர்வதேச அளவில் பெருமையை பெற்றுள்ளது.
கோவெண்ட்ரி மற்றும் வார்விக்ஷையர் வர்த்தக அறை (Coventry and Warwickshire Chamber of Commerce) ஆகியவை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த விழா நேற்று (23.04.2026) கோவெண்ட்ரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Belgrade Theatre-இல் நடைபெற்றது.
கலை மற்றும் பாரம்பரியம்
பல முன்னணி கலை நிறுவனங்களும், கலை மற்றும் கலாச்சார துறையில் முக்கிய பங்காற்றும் அமைப்புகளும் பங்கேற்ற கடுமையான போட்டியில் சித்ரகலைமன்றம் இந்த விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை, கடந்த 26 ஆண்டுகளாக கலை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்த்து வரும் சித்ரகலைமன்றத்தின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும் என அதன் அங்கத்தவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தின் உறுதியான ஆதரவு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றியைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த விருது எங்கள் பயணத்தில் இணைந்து வந்த ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.
எங்களை நம்பி தொடர்ந்து ஆதரித்து வந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இது எங்கள் சமூகத்தின் வெற்றி” என சித்ரகலைமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மேடையில் தமிழர் கலை மற்றும் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்துள்ள இந்த சாதனை, சமூகத்திற்கு பெருமையையும் ஊக்கத்தையும் அளிப்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்