மனுஷவுக்கு எதிரான சட்டநடவடிக்கை: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது இடம்பெற்ற முறைகேடு மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு இன்று (28) குறித்த விடயத்தினை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு
இதன்போது, மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோப்புகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

அவர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்காக ஒரு நாளை வழங்குமாறும் இதன்போது அந்த அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.
இஸ்ரேலுக்கு ஊழியர்களை அனுப்புதல்
அன்றைய தினம் குறித்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் ஆணைக்குழுவிற்குப் பணித்தார்.

கடந்த அரசாங்க காலத்தில் இஸ்ரேலுக்கு விவசாயப் பணிகளுக்காக ஊழியர்களை அனுப்பும் போது, தனக்கு அரசியல் ரீதியில் அனுதாபமுள்ள ஊழியர்களைத் தெரிவு செய்து அனுப்பியதன் மூலம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, மனுஷ நாணயக்கார ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |