அப்பிள் வரலாற்றில் மிகப்பெரிய புதுப்பிப்பு
அப்பிள் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட மென்பொருளான iOS 18 இனை நிறுவனத்தின் வருடாந்த மென்பொருள் பொறியியலாளர்களின் மாநாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த மாநாடானது எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த மென்பொருளானது அப்பிள் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய அடைவாக இருக்கும் என்றும், இது அப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால இலட்சியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மென்பொருள் முறைமையானது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் அவை தொடர்பான தகவல்களை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை மேம்படுத்திய பதிப்பாக Siri யை இந்த மென்பொருள் கொண்டுள்ளது.
Siri மற்றும் Messages ஆகிய இரண்டு செயலிகளும் வாக்கியங்கள் மற்றும் கேள்விகளை எவ்வாறு தானாக முடிக்க முடியும் என்பதை மேம்படுத்தும் புதிய அம்சங்களை அப்பிள் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுடன் மேலதிகமாக, அப்பிள் இசையானது தானாக உருவாக்கிய பாடல்தொகுப்புகளை அறிமுகப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செயலி
தவிரவும், iOS இன் மென்பொருள் பொறியியலாளர்கள் வேகமாக எழுத்துக்களை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் வகையில், Xcode என்ற புதிய செயலியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு செயற்றிறனை கொண்டு உருவாக்கப்படும் இந்த செயலியின் மூலமாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
iOS 18 இன் வெளியீட்டிற்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது மென்பொருள் புதுப்பிப்பைப் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியிடப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |