கனவுடனேயே கல்லறைக்கு செல்லும் அமெரிக்கா - இஸ்ரேல்! ஈரான் தளபதியின் கடுமையான எச்சரிக்கை
ஈரான் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி (Amir Hatami), அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்க முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், அந்த நாடுகள் ஈரானை பணியவைக்க நினைக்கும் கனவுடனேயே "கல்லறைக்குச் செல்லும்" என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
'டெனா' (Dena) என்ற போர்க்கப்பலின் மாலுமிகளை வரவேற்கும் நிகழ்வில் பேசிய தளபதி ஹடாமி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈரானிய மக்களின் உறுதிப்பாடு மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கமேனியின் மறைவு ஈரானை பலவீனப்படுத்தும் என்று எதிரிகள் தவறாகக் கணக்கிட்டனர் என்றும், ஆனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மில்லியன் கணக்கான மக்கள் இரவும் பகலும் தேசியக் கொடியை ஏந்தி ஒற்றுமையை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தரைவழி ஊடுருவல்
அத்தோடு, அமெரிக்கா ஈரானுக்குள் ஒரு சிறிய அளவிலான தரைவழி ஊடுருவலை முயற்சித்தால் கூட, ஈரானிய மண்ணில் ஒரு எதிரி சிப்பாய் கூட உயிருடன் எஞ்சியிருக்க மாட்டார் என்று ஈரானிய இராணுவத் தளபதிகள் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் ஹடாமி எச்சரித்துள்ளார்.

வொஷிங்டன் அல்லது டெல் அவிவ் (இஸ்ரேல்) எடுக்கும் எந்தவொரு தவறான முடிவும் ஈரானின் மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புனிதமான தாயகத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் என மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |