செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : சோமரத்ன ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக குழு கூட்டத்தில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என மன்று அறிவித்துள்ளது.
இடைக்கால அறிக்கை தாக்கல்
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இன்றைய வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் உரிய தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இண்டு விண்ணப்பங்கள் பிரேரிக்கப்பட்டன. முதலாவது C -14 பரிசோதனைக்கு இந்த மாதிரிகள் விரைவாக அனுப்பப்பட வேண்டும்.
இரண்டாவது ஏற்கனவே சிறைச்சாலையில் இருக்கும் செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பில் ஈடுபட்டிருந்த சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலம் சம்மந்தமாக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கும் அவரிடமிருந்து வாய் முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும் நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட வழக்கு
இந்த நிலையில் சோமரத்ன ராஜபக்சவிடம் இருந்து வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை வழங்கியதுடன் C -14 பரிசோதனைக்கு அனுப்புவது சம்மந்தமாக வருகின்ற மாதம் 19ஆம் திகதி நிர்வாக கூட்டத்தில் முடிவெடுத்த பிற்பாடு தீர்மானம் எடுக்கப்படும் என மன்று அறிவித்துள்ளது

அத்துடன் எலும்புகளின் பரிசோனை சம்மந்தமான நிபுணர் குழுவை வருகின்ற கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும், பின்னர் அது சம்மந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் சட்ட வைத்தியர் அதிகாரி தெரிவித்தார்.
இந்தநிலையில், இது சம்மந்தமாக நிர்வாக குழுக் கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக வருகின்ற மாதம் 19ஆம் திகதி 2.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |