யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - miss ஆன முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் பொறுப்பதிகாரிகள் சிலர் பங்கேற்காமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14.10.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் பொறுப்பதிகாரிகள் சிலர் கூட்டத்தில் சமூகமளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
சில அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை
குறித்த துறைகள் தொடர்பான விடயங்களுக்கு யார் பதிலளிப்பது என்றும், பொறுப்பான அதிகாரிகள் இல்லாத நிலையில் அந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலக அதிகாரிகள், கூட்டம் தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும், சில அதிகாரிகள் பங்கேற்க முடியாமை குறித்து முன்கூட்டியே அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தனர். அதேவேளை, கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதியளித்த சில அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கூட்டத்தின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன், மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டங்களைத் தொடர்புடைய அதிகாரிகள் தவிர்க்க முடியாது எனவும், தத்தமது துறைகள் சார்ந்த விடயங்களுக்கு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |