யாழிலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்திய சம்பவம் குறித்த விசாரணை...! நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்குப் பயணிக்கவிருந்த பயணிகளில் இந்தியப் பிரஜைகளான இருவரின் உடைமையிலிருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.
திணைக்கள அதிகாரிகள்
அதனைத் தொடர்ந்து பயணிகளைச் சோதனைக்கு உட்படுத்திய வேளை சந்தேகத்திற்கு இடமான 26 பயணிகளைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள், அவர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் (Scan) செய்தனர்.
அதன் போது ஆறு பேரின் உடலினுள் தங்கக் கட்டிகள் காணப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
அதனை அடுத்து ஆறு பேரையும் தமது காவலில் எடுத்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள், ஏனைய 20 பேரையும் விசாரணைகளின் பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில் தங்கக் கட்டிகளை உடைமையில் வைத்திருந்த இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (18-06-2026) முற்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் தமது காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை தங்கக் கட்டிகளை விழுங்கிய நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு பேரையும் தமது காவலில் சிகிச்சை பெற நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் அதற்கும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் இரு இலங்கைப் பெண்களும் ஆறு இந்திய ஆண்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |